×

ஆவின் பால் பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டதா?: மேலாண் இயக்குநர் விளக்கம்

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என்று ஆவின் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லரை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக அதிக அளவில் மழை பொழிந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது.

எனவே தாம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. எனவே சில இடங்களில் 4ம் தேதி தேதி பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அன்று விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை சில சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புற கால்வாயில் கொட்டிவிட்டு சென்றதாக தெரியவருகிறது. மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ஆவின் பால் பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டதா?: மேலாண் இயக்குநர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Managing Director ,CHENNAI ,
× RELATED வார இறுதியை முன்னிட்டு 750 சிறப்பு...