×

கோடியக்கரை அருகே மீனவர்களை கட்டையால் தாக்கி வலை, மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி (40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரும், வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ராஜ்குமார் (33), சக்திவேல்(46) ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், பக்கிரிசாமியின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் ஏறிய அவர்கள், மீனவர்கள் 3 பேரையும் கட்டையால் தாக்கியதோடு, அவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, செல்போன், வாக்கி டாக்கி, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பறித்தனர். மேலும் படகில் பிடித்து வைத்திருந்த 20 கிலோ நண்டு, 15 கிலோ வலைகளை பறித்து கொண்டு அவர்களை அங்கிருந்து அடித்து விரட்டினர். இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த 3 மீனவர்களும், கோடியக்கரைக்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தனர். இதுதொடர்பாக மீனவ பஞ்சாயத்தார், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் ஆகியோரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து மீன் வளத்துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கோடியக்கரை அருகே மீனவர்களை கட்டையால் தாக்கி வலை, மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Kodiakkarai ,Pakirisamy ,Vellapallam ,Vedaranyam taluka ,Nagapattinam district ,Dinakaran ,
× RELATED கோடியக்கரை சரணாலயத்துக்கு 10 லட்சம் பறவைகள் வருகை