×

பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் மூடல்

 

ஊட்டி, டிச.9: பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய மற்றும் சிறிய புல் மைதானங்கள் மூடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு, நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள பல்வேறு மலர் செடிகளையும் பெரணி செடிகளையும் மற்றும் கள்ளிச்செடிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். இது மட்டுமின்றி பூங்காவில் உள்ள அழகிய புல் மைதானங்களில் ஓடியாடி விளையாடுகின்றனர்.

இதற்காக எப்போதும் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் பச்சை கம்பளம் விரித்தார்போல் பூங்கா ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் சில நாட்கள் மழை பெய்த நிலையில் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் பூங்கா மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, புல் மைதானங்களை பராமரிக்கும் பணிகளை தற்போது பூங்கா நிர்வாகம் துவக்கி உள்ளது. இதற்காக பெரிய மற்றும் சிறிய புல் மைதானங்கள் இரண்டும் மூடப்பட்டுள்ளன. இவ்விரு புல் மைதானங்களுக்குள்ளும் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலையில் தற்போது பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

The post பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Government Botanical Garden ,Dinakaran ,
× RELATED 2வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில்...