×

பழங்குடியின பெண்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத்தொகை வழங்க வேண்டும்

 

ஊட்டி, டிச.9: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின பெண்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தோடர் நலவாழ்வு சங்க செயலாளர் ஸ்ரீகாந்த் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பண்டைய பூர்வீக பழங்குடி மக்களான தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர் மற்றும் காட்டு நாய்க்கர் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

தற்போது பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1000 மகளிருக்கு வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியின மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1000 கிடைக்கவில்லை. எனவே, நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மகளிரின் நலன் கருதி, சிறப்பு சலுகையாக அனைத்து பழங்குடியின மகளிருக்கும் இத்திட்டத்தின் கீழ் ரூ.1000ம் மாதம் தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

The post பழங்குடியின பெண்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்