×

சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் ஸ்ரீவை. கோலப்பொடிகள்

நெல்லை: ஸ்ரீவைகுண்டம் அருகே தயாராகும் வண்ண, வண்ண கோலப்பொடிகள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகி வருகிறது. மார்கழி, தை மாத தேவைக்காக தயாரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக கோலங்கள் திகழ்கிறது. வீடுகளின் முன்பு பெண்கள் வரையும் கோலங்களுக்காக வெள்ளை மற்றும் பல்வேறு வண்ண கோலப்பொடிகள் பல பகுதிகளில் தயாராகிறது. இந்த கோலப்பொடிகளின் தேவை என்பது பிற மாதங்களை விடவும் மார்கழி மற்றும் தை மாதங்களில் அதிகமாக உள்ளது. இந்த கோலப்பொடிகள் பெரும்பாலும் குடிசைத்தொழிலாக தயாராகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள பொன்னன்குறிச்சியில் தயாராகும் வண்ண, வண்ண கோலப்பொடிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பதோடு சிங்கப்பூருக்கும் ஏற்றுமதியாகி வருகிறது. இங்கு தயாராகும் கோலப்பொடிகளுக்கு மூலப்பொருளான சுண்ணாம்புக்கல் பொடி எனப்படும் வெள்ளை கல்பொடி நெல்லை மாவட்டம் தாழையூத்து, மானூர், ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. இந்த வெள்ளை பொடி 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.250க்கு கிடைக்கிறது. இதனை வாங்கி சுத்தம்செய்து, முதலில் வெண்மை நிறம் கொண்ட பொடியில் வண்ணப் பொடிகள் கலக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தண்ணீரில் கலக்கப்பட்ட லிக்விட் கலர்கள் சேர்க்கப்பட்டு, நன்றாக கலர்கள் வரும் வரையில் நனைக்கப்படுகிறது. அதன் பின்னர் வெயிலில் உலர்த்தப்படுகிறது.

இதற்கான பவுடர் கலர்கள் மற்றும் லிக்விட் கலர்கள் மதுரையில் இருந்து வரவழைக்கப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட வண்ணங்களில் தயாராகும் இந்த கோலப்பொடிகள் சிறிய மற்றும் பெரிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பண்டல்களாக விற்பனைக்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, கோவை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்காக கன்டெய்னர் மூலம் கப்பலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து வண்ண வண்ண கோலப்பொடிகள் தயாரித்து வரும் பொன்னன்குறிச்சியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: மார்கழி, தை மாதங்களில் அதிகமாக தேவைப்படும் என்பதால் உற்பத்தியை இருமடங்காக அதிகரித்துள்ளோம். வண்ண கோலப்பொடிகள் 100, 150, 300 கிராம்கள், ஒரு கிலோ என்ற எடைகளில் விற்பனை செய்து வருகிறோம். 100கிராம் வண்ண கோலப்பொடிகள் 10 பாக்கெட் கொண்ட ஒரு பண்டல் ரூ.20க்கும், 150 கிராம் 10 கொண்ட பண்டல் ரூ35க்கும், 300 கிராம் தனித்தனி கலர் கோல ெபாடி பாக்கெட் ஒன்று ரூ.8க்கும், ஒரு கிலோ எடையிலான ஒரு பாக்கெட் ரூ.25க்கும் விற்பனை செய்கிறோம். நாங்கள் தயாரிக்கும் கலர் ேகாலப்பொடிகளை மொத்த வியாபாரிகள், நிறுவனங்கள், சிறு வணிகர்கள் என பல்வேறு மாவட்டங்களுக்கும் வாங்கிச் செல்கின்றனர். இங்கிருந்து சிங்கப்பூருக்கும் அனுப்பி வருகிறோம் என்றனர்.

The post சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் ஸ்ரீவை. கோலப்பொடிகள் appeared first on Dinakaran.

Tags : Sri Vai ,Singapore ,Srivaikundam ,Thai ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் சுவாமி...