×

தூத்துக்குடி ஜிஹெச்சில் கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி, டிச. 8: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் லட்சுமிபதி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைகளை புதுப்பிக்கவும், தண்ணீர் செல்லக்கூடிய பைப் லைன் உள்ளிட்டவற்றை உடனடியாக சரி செய்யவும் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை வளாகம், அவசர சிகிச்சைப் பிரிவு, இதயவியல் சிகிச்சை பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்குகள், புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை பிரிவு, கழிவறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மின் பெட்டிகள் மற்றும் மின் கம்பிகளில் ஈரப்பதம் இல்லாதவாறு பாதுகாப்புடன் வைத்திருக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் நவீன சமையல் அறைக்குச் சென்று அங்கு தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த உணவுகளை சாப்பிட்டு பார்த்து பரிசோதித்தார். பின்னர் மருத்துவமனையின் மின் பிரிவு அறை, நவீன சலவையகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

ஆய்வுக்குப் பிறகு கலெக்டர் லட்சுமிபதி, நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதா?, ஏதாவது குறைகள் எதுவும் இருக்கிறதா?, குறைகள் இருந்தால் எப்படி நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைகளை புதுப்பிக்கவும், தண்ணீர் செல்லக்கூடிய பைப் லைன் உள்ளிட்டவற்றை உடனடியாக சரி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். மேலும் மருத்துவமனை வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக வாரம் ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். அதன் மூலம் தேவையான நிதி பெறுவதற்கும், என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும், என்றார்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள், பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி ஜிஹெச்சில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tuticorin GH ,Thoothukudi ,Lakshmipathi ,Thoothukudi Government Hospital ,Thoothukudi GH ,Dinakaran ,
× RELATED இடைநிற்றல் மாணவிகள் 15பேர் மீண்டும் பள்ளியில் ேசர்ப்பு