×

விருத்தாசலத்தில் லாரியை திருடி சென்ற வாலிபர் கைது

 

விருத்தாசலம், டிச. 8: நள்ளிரவில் லாரி திருட்டில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் ஜங்ஷன் சாலை எல்ஐசி அலுவலகம் எதிரே 10க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விருத்தாசலம் திரு.வி.க., நகரைச் சேர்ந்த வரதராஜன், சித்தேரிக்குப்பத்தைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோரின் இரண்டு லாரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதை பார்த்த மற்ற லாரி டிரைவர்கள், லாரிகளில் பின்னால் துரத்திச் சென்றனர்.

அப்போது, விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி அருகே உள்ள பாலத்தில் மரம் நபர் கடத்திச் சென்ற ஒரு லாரி மோதியது. இதனால், லாரியை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர் தப்பியோடினார். மற்றொரு கும்பல் கடத்திச் சென்ற லாரியில் டீசல் இல்லாமல் கோ.பூவனுார் அருகே நின்றது. இதனால், லாரியில் இருந்து மர்ம நபர்கள் இருவர் தப்பியோடினர். அதில் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் வேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அலி(27) என்பதும், இவர் விருத்தாசலத்தில் கூலி வேலை செய்து கொண்டு இரவு நேரங்களில் கோயில், சர்ச் போன்ற பொது இடங்களில் தங்கி வந்தது தெரிய வந்தது. மேலும், திருச்சியைச் சேர்ந்த சரவணன், திருநெல்வேலியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் சேர்ந்து லாரி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, முகம்மது அலியை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

The post விருத்தாசலத்தில் லாரியை திருடி சென்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Vrudhachalam Junction Road ,Vrudhachalam ,Dinakaran ,
× RELATED சலூன் கடைக்காரர் தீக்குளித்து சாவு