×

செல்லாண்டியம்மன்துறை பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்

 

திருப்பூர், டிச.8: திருப்பூர் செல்லாண்டியம்மன்துறை பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என அமைச்சருக்கு, எம்எல்ஏ செல்வராஜ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான க.செல்வராஜ், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட செல்லாண்டியம்மன்துறை பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 1996-ம் ஆண்டு குடியிருப்பு கட்டப்பட்டது.

இது மூன்று தளங்களுடன் 240 குடியிருப்புகள் உள்ள அடுக்குமாடி பகுதியாகும். வருவாய்த்துறை ஆவணங்களின்படி மேற்படி நிலம் அரசு புறம்போக்கு செல்லாண்டியம்மன் கோயில் என வகைப்பாட்டில் உள்ளது. நில உரிமை மாற்றம் தொடர்பாக சென்னை நில நிர்வாக ஆணையரால், இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கப்படாததால் 240 குடும்பங்களுக்கும் கிரையப்பத்திரம் வழங்க இயலாத நிலை உள்ளது.  இத்திட்டப்பகுதியை மாநகராட்சிக்கு வாரியம் ஒப்படைக்காத நிலையில் 240 குடும்பங்களில் சுமார் 1000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம் மறுக்கிறது.

குடிநீர் இணைப்பு பெற வாரியத்தின் மூலம் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை மாநகராட்சிக்கு செலுத்தவும் வாரியம் தயாராக உள்ளது. சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி ஆகியவற்றை செலுத்துவதற்கு ஏதுவாக பயனாளிகளின் பெயரில் வரி விதிப்பு செய்ய பட்டியல் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உயிர் வாழ்வாதாரமான குடிநீர் இணைப்பு வழங்க போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி மன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி குடிநீர் இணைப்பு வழங்க பரிந்துரைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

The post செல்லாண்டியம்மன்துறை பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chellantiammanthurai ,Tirupur ,MLA ,Chellandiyammanthurai ,
× RELATED இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்