×

தடுப்பணை, குட்டையில் மூழ்கி வாலிபர் உட்பட 2 பேர் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பணை, குட்டையில் மூழ்கி வாலிபர் உட்பட 2 பேர் குளிக்க சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிஞ்சிவாக்கம் பகுதியில் செல்லக்கூடிய கூவம் ஆற்றில் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் வழிந்து ஓடியது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் தடுப்பணையின் மேல் இருந்து சுமார் 20 அடிக்கும் கீழ் உள்ள கூவம் ஆற்றின் தண்ணீரில் குதித்து விளையாடி வந்தனர்.

எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அப்பகுதியில் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரின் மகன் டில்லிபாபு நண்பர்களுடன் பிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள கூவம் தடுப்பணையில் நேற்று குளிக்க சென்றுள்ளார். அப்போது தவறுதலாக ஆழமான பகுதிக்குச் சென்ற டில்லிபாபு நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து நீரில் மூழ்கிய டில்லிபாபு வெளியே வர காலதாமதம் ஏற்பட்டதால் உடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் டில்லிபாபு நீரில் மூழ்கியது குறித்து குடும்பத்தினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர் டில்லிபாபுவை சடலமாக மீட்டனர். உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு சம்பவம்: திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் மயில்வேல் (51). இவர் பிஞ்சிவாக்கத்தில் உள்ள வில்சன் என்பவரின் கேன்டீனில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்தவர் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.பின்னர் மப்பேடு கிராமத்திலிருந்து இறையாமங்கலம் கிராமம் செல்லும் சாலையில் சத்தரை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள குட்டையில் அவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. குட்டையில் குளிக்க சென்றவர் சேற்றில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தகவலின் பேரில் மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் இறந்த மயில்வேல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தடுப்பணை, குட்டையில் மூழ்கி வாலிபர் உட்பட 2 பேர் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur district ,
× RELATED சட்ட விரோதமாக நரிக்குறவர்,...