×

சென்னையில் 3வது நாளாக புயல் மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் 3வது நாளாக புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

குறிப்பாக தாம்பரம் மாநகராட்சி 1, 2, 3வது வார்டு பகுதிகளான அனகாபுத்தூர், பம்மல், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக நேரில் ஆய்வு செய்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமை, பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் பாய், போர்வை ஆகியவை அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், நகராட்சி ஆணையர் அழகுமீனா, செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் சமயமூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா, தாம்பரம் கண்காணிப்பாளர் ஜான் லூயிஸ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், பம்மல் மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் மிக்ஜாம்’ புயல் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, அனகாபுத்தூர் பகுதியில் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினேன். அரசின் மீட்புப் பணிகளுக்கு துணை நின்று தன்னார்வலர்கள் பலரும் உதவி வருகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

The post சென்னையில் 3வது நாளாக புயல் மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள்...