- தெலுங்கானா
- முதல் அமைச்சர்
- ரேவந்த் ரெட்டி
- LB ஸ்டேடியம், ஹைதரா
- துணை முதலமைச்சர்
- சோனியா
- ராகுல்
- பிரியங்கா
- கார்கே
- திருமலா
- காங்கிரஸ்
- தெலுங்கானா முதலமைச்சர்
- ஹைதராபாத் எல்பி
- துணை
திருமலை: தெலங்கானா முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி நேற்று பதவி ஏற்று கொண்டார். அப்போது பேசிய அவர் தெலங்கானா மக்களின் உரிமைகளை பாதுகாக்க பாடுபடுவேன் என்று கூறினார். ஆந்திராவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலமாக உதயமானது. 29வது மாநிலமாக அறிவிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக சந்திரசேகரராவ் பதவியேற்றார். அதன்பின்னர் 2019ம் ஆண்டு தேர்தல் நடக்க இருந்த நிலையில் முன்கூட்டியே அவர் பேரவையை கலைத்தார். இதையடுத்து கடந்த 2018 டிசம்பரில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. 2வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியமைத்தார். கடந்த 9 ஆண்டுகளாக சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடந்து வந்தது.
இந்நிலையில் ஆட்சிக் காலம் நிறைவடைந்த நிலையில் தெலங்கானாவின் 119 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 30ம் தேதி பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களையும், பாஜ 8, எம்ஐஎம் 7 இடங்களையும் பிடித்தது. இதன்மூலம் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் நேற்று மதியம் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியகாந்தி, ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு முதல்வராக ரேவந்த் ரெட்டிக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புபிரமாணம் செய்து வைத்தார்.
அதனை தொடர்ந்து துணை முதல்வராக பட்டி விக்ரமார்கா, அமைச்சர்களாக உத்தம் குமார், கோமட்டி வெங்கட், ஸ்ரீதர் பாபு, சீதக்கா, கொண்டா சுரேகா, தும்மலா நாகேஸ்வரராவ், ஜூபலி கிருஷ்ணாராவ், பொன்னம் பிரபாகர், தாமோதர ராஜநரசிம்ஹா, ஸ்ரீநிவாஸ், பிரசாத் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து நடந்த விழாவில் ‘ஜெய் தெலங்கானா, ஜெய் சோனியம்மா’ என்ற முழக்கங்களுடன் முதல்வர் ரேவந்த் பேசியதாவது:
தெலங்கானா மாநிலம் பல போராட்டங்களுடன், தியாகிகளின் தியாகத்தின் அடித்தளத்தில், பல கோடி மக்களின் கனவு மற்றும் நம்பிக்கைகளுடன் உருவாக்கப்பட்டது. மாநில வளர்ச்சி குறித்த உங்கள் எண்ணங்களை உணர்ந்து தெலங்கானாவை நலன் மற்றும் வளர்ச்சி மாநிலமாக மாற்றும் பொறுப்பு என்னிடம் உள்ளது. நாளை (இன்று) காலை 10 மணிக்கு ஜோதி ராவ் பூலே பிரஜா பவனில் பிரஜா தர்பார் நிகழ்ச்சி நடத்தப்படும். தெலங்கானா மக்களின் உரிமைகளை பாதுகாக்க பாடுபடுவேன். நகரில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டி தெலங்கானாவை நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் முதலிடத்துக்கு உருவாக்குவேன். இவ்வாறு அவர் பேசினார்.
* இலாகாக்கள் ஒதுக்கீடு
தெலங்கானாவில் துணை முதல்வர் பட்டி விக்ரமார்காவுக்கு வருவாய்த்துறையும், உள்துறையை உத்தம் குமாருக்கும், நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கோமட் வெங்கட்டிற்கும், நிதித்துறையை அமைச்சர் ஸ்ரீதர் பாபுவுக்கும், அமைச்சர் சீனிவாசுக்கு நீர் வடிகால்த்துறையை முதல்வர் ஒதுக்கினார். மேலும், அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு பெண்கள் நலத்துறை, அமைச்சர் தாமோதர ராஜநரசிம்மாவுக்கு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணாவுக்கு உணவுத்துறை, அமைச்சர் சீதக்காவுக்கு பழங்குடியினர் நலத்துறை, அமைச்சர் தும்மல நாகேஸ்வரராவுக்கு சாலைகள் கட்டிடங்கள் துறையை முதல்வர் ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ரேவந்த் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
* தெலங்கானாவிலும் இலவச பேருந்து சேவை
தமிழகத்தில் மக்களை கவரும் பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இவற்றை அண்டை மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி வருகின்றன. இதேபோல் தெலங்கானா முதல்வராக பொறுப்பேற்ற ரேவந்த் தனது தேர்தல் வாக்குறுதியாக தமிழகத்தை போன்று பெண்களுக்கான இலவச பஸ் சேவை உள்ளிட்ட 6 திட்டங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதால் 6 திட்டங்களை ஏற்று கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார்.
* முதல்வர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி அகற்றம்
ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வரின் அதிகாரபூர்வ வீடான பிரகதி பவன் முன் இரும்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. தர்ணா, போராட்டம் மற்றும் யாரும் எளிதாக வராத வகையில் பிரகதி பவன் சுற்றி பிரமாண்ட தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் அந்த தடுப்பு வேலி காஸ் கட்டர் கொண்டு அகற்றப்பட்டது.
The post ஐதராபாத் எல்பி ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு: துணைமுதல்வர், 11 அமைச்சர்களும் பதவியேற்றனர், சோனியா, ராகுல், பிரியங்கா, கார்கே பங்கேற்பு appeared first on Dinakaran.
