×

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. ஒரு போலீஸ் அதிகாரி மீது மட்டும் குற்றம் சாட்டி சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கை நிராகரிப்பு!!

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அனுப்பினார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக மேலும் பல்வேறு பொதுநல மனுக்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அர்ச்சுனனின் புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கை பதவி செய்திட சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அர்ச்சுனன் புகார் மனு மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மேலும் சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் சிபிஐயின் இறுதி அறிக்கைகையை நிராகரித்திட வேண்டுமென்று கே.எஸ்.அர்ச்சுனன் சார்பில் ஆட்சேபனை மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீது சிபிஐயின் பதில் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில், இன்று மதுரை சிபிஐ தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பசும்பொன்சண்முகையா, சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிராகரித்தார். சிபிஐ முறையாக விசாரணை நடத்தி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது ஆறு மாத காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்திட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

The post தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. ஒரு போலீஸ் அதிகாரி மீது மட்டும் குற்றம் சாட்டி சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கை நிராகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,CBI ,Madurai ,CPI ,Tuthukudi Sterlite shooting ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை பாலியல்...