×

முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதால் 2015ம் ஆண்டில் நடந்த பெரும் சேதம் தவிர்ப்பு

சென்னை: 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு மக்கள் வெளியேறும் சூழலுக்கு ஆளாகினர். அதுமட்டுமின்றி, இந்த வெள்ளப்பாதிப்பில் சென்னையில் உயிரிழப்பு 260ஐ தாண்டியதாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, இந்த பெருவெள்ளத்தால் காணாமல் போனார் கணக்கு இன்றளவும் கானல் நீர் போல தான் உள்ளன. அதிலும், பலர் தங்களின் உடைமைகளை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவித்த கோரக்காட்சிகள் நெஞ்சில் ஆறாத வடுவாக இன்றளவும் கண்முன் வந்து நிற்கின்றன. தற்போது, மிக்ஜாம் புயலால் மிகப்பெரிய மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரியளவிலான பாதிப்புகள் இல்லை என்பதே மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. குறிப்பாக, வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, அதிகாரிகள் மழையை எதிர்க்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினர். ஏரிகளில் தூர்வாருதல், மின் கம்பி தடங்களை சீரமைத்தல், பாதுகாப்பான இடங்களில் மக்களை தங்க வைப்பதற்கான திட்டம்; அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை அரசு தரப்பில் செய்யப்பட்டன. இதனால், தற்போது பெய்த பெருமழையையும் எளிதில் சமாளிக்கக்கூடிய வகையில் திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது.

அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மக்களுக்கு மட்டும் அல்ல அப்போதை ஆளும் அரசுக்கும் நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்தது. அதன்படி, அரசின் கவனகுறைவு காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தவறான நேரத்தில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன. ஆனால், 2015ம் ஆண்டை விட தற்போது மழை பொழிவை சந்தித்தும் சேதம் தவிகர்க்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் 98 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளது. அதன்படி, நேற்றைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வரை திறக்கப்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாகவே ஆயிரம் கன அடி நீர் முதல் 8 ஆயிரம் கன அடி நீர் வரை திறந்து விடப்பட்டன. முன் கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதால், தற்போது 12 ஆயிரம் கன அடி நீர் ஏரிக்கு வந்தும் செம்பரம்பாக்கத்தால் சென்னை மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

The post முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதால் 2015ம் ஆண்டில் நடந்த பெரும் சேதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...