×

செய்யாறு அருகே மது கடைக்கு லிப்ட் கேட்டு டிரைவரை கொன்று பறித்த பைக்கில் சென்னையில் சுற்றித்திரிந்த பெயிண்டர்

செய்யாறு, டிச.3: செய்யாறு அருகே கடந்த மாதம் மது கடைக்கு லிப்ட் கேட்டு டிரைவரை கொன்றுவிட்டு, அவரது பைக்கில் சென்னையில் சுற்றித்திரிந்த பெயிண்டர், திருட்டு செல்போனை விற்றதால் சிக்னலை கண்காணித்து ஒரு மாதத்தில் போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி நத்தகொள்ளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(30). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 3ம் தேதி காலை காஞ்சிபுரம்-கலவை சாலை வெம்பாக்கம் தனியார் பள்ளி அருகே செல்வராஜ் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சென்று சடலத்தை மீட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரித்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் செல்வராஜின் பைக், செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்ய தொடங்கினர். இதில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்வராஜின் செல்போனை வேறு சிம்கார்டு மூலம் சென்னையில் பயன்படுத்துவது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். இதில் ₹15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் செல்வம்(41) என்பவர் குறைந்தவிலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் சென்னைக்கு சென்று செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் செல்வத்தை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். அப்போது அவர் சென்னையில் பெயிண்டர் வேலைக்காக சென்று கொலையான செல்வராஜின் பைக்கில் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வெம்பாக்கத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்த செல்வத்தை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் செல்வராஜை கொலை செய்தார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதான பெயிண்டர் செல்வத்தை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி ேவலூர் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில் கைதான செல்வம் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

கொலையான செல்வராஜ் கடந்த மாதம் 2ம் தேதி இரவு பில்லாந்தாங்கல் கூட்ரோட்டில் உள்ள மதுக்கடையில் மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது, வழியில் நடந்து சென்ற செல்வம், பைக்கை நிறுத்தி, எங்கு செல்கிறாய்? எனக்கேட்டார். அதற்கு டாஸ்மாக் கடைக்கு செல்வதாக செல்வராஜ் கூறியதை தொடர்ந்து, ‘நானும் கடைக்குதான் செல்கிறேன்’ எனக்கூறி லிப்ட் கேட்ட செல்வம் பைக்கில் ஏறிக்கொண்டார். கடைக்கு சென்றவுடன் இருவரும் தனித்தனியாக மது வாங்கி அங்குள்ள தனியார் பள்ளி அருகே அமர்ந்து குடித்துள்ளனர். அப்போது செல்வராஜ் வைத்திருந்த செல்போன், பைக்கை கண்ட பெயிண்டர் செல்வத்திற்கு, அதனை அபகரிக்க வேண்டும் என எண்ணம் ஏற்பட்டுள்ளது. உடனே அதிக போதையில் இருந்த செல்வராஜிடம் இருந்த செல்போனை, செல்வம் பறித்துள்ளார்.

ஆனால் செல்வராஜ் செல்போனை விடாமல் எச்சரித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த செல்வம், அங்கிருந்த பெரிய கல்லால் செல்வராஜின் தலை மற்றும் முகத்தில் தாக்கி கொன்றுவிட்டு செல்போன், பைக்கை பறித்துக்கொண்டு தப்பினார். இதில் செல்போனை விற்றதால், சிக்னல் மூலம் சிக்கிக்கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post செய்யாறு அருகே மது கடைக்கு லிப்ட் கேட்டு டிரைவரை கொன்று பறித்த பைக்கில் சென்னையில் சுற்றித்திரிந்த பெயிண்டர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Seyyar ,Seiyaru ,
× RELATED ரதசப்தமி பிரமோற்சவம் நிறைவு...