×

மாவட்டத்தில் மாறுபட்ட காலநிலை குளிர், காய்ச்சலால் மக்கள் அவதி

 

ஊட்டி, டிச.2: நீலகிரியில் கடந்த சில தினங்களாக காலநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருவதால் சளி மற்றும் காய்ச்சல் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 2வது வாரத்திற்கு மேல் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்கு மேல் உறைப்பனி விழும். ஆனால், கடந்த வாரம் பெய்த மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாள் தோறும் மேக மூட்டம், வெயில் மற்றும் அவ்வப்போது மழை என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது.

இதனால், ஒரு சில நீர் நிலைகள் மாசடைந்து காணப்படுகிறது. ஊட்டியில் பகலில் வெயிலும், காலை மற்றும் மாலை நேரங்களில் பனி மூட்டம் அல்லது மேக மூட்டம் காணப்படுகிறது. மோசமான இந்த காலநிலையால் சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறை அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் குளோரின் மருந்தை தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், அடிக்கடி மாறும் காலநிலையால் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு சளி, இரும்பல், தலைவலி, வைரஸ் காய்ச்சல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பொதுமக்கள் நன்றாக காய்ச்சி தண்ணீரை குடிக்க வேண்டும். பழைய உணவு பொருட்களை உட்க்கொள்ளக்கூடாது. உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும். பழம் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவிய பின் உட்க்கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை ஸ்வொட்டர், தொப்பி போன்றவைகளை அணிவித்து சூடாக வைத்துக் கொள்வது அவசியம், என்றனர்.

The post மாவட்டத்தில் மாறுபட்ட காலநிலை குளிர், காய்ச்சலால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,
× RELATED கேரட் விலை புதிய உச்சத்தை எட்டியது