×

வேளாண் தொழில் முனைவோராக இளைஞர்களை உருவாக்கும் திட்டம்: விண்ணப்பிக்க இணை இயக்குநர் அழைப்பு

திருவள்ளூர், டிச. 2: 2023 – 2024ம் நிதியாண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை தோட்டக்கலை வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களைக் கொண்டு வளர்ந்து வரும் தொழில் நுட்ப அறிவை வேளாண்மையில் பயன்படுத்தி வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேளாண் பட்டதாரிகளை வேளாண் சார்ந்த சுய தொழில் தொடங்கிட ஊக்குவிக்கப்படும். புதிய தொழில்நுட்பங்களை வேளாண் பட்டதாரி இளைஞர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். வேளாண்மையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் சென்று நீடித்த நிலையான கிராமப்புற வளர்ச்சியை அடைய செய்தல், உழவர்கள் நிலையான வருமானம் பெற்று அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை மேம்படுத்தப்படும்.

இந்த ஆண்டு 2023-2024 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். 104 கிராமப் பஞ்சாயத்துக்களில் தொழில் துவங்க விண்ணப்பிக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தப்படும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் (AIF) கீழ் அளிக்கப்படும் நிதியுதவி பெற்று. வங்கி கடனுடன் அல்லது வங்கி கடன் உதவியுடன் வழங்கும் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழிலை துவங்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் 21 முதல் 40 வயது வரை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலைவளம், பொறியியல் (குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு) முடித்து இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக் கூடாது. வின்ணப்பதாரர் கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும். எனவே தகுதியான இளைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெற 10 மற்றும் 12ம் வகுப்புச் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை பயனாளியின் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆணையம் ஆகிய ஆவணங்களுடன் அகிரிஸ்நெட் இணையதளத்தில் விண்ணப்பித்தும் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன் தெரிவித்துள்ளார்.

The post வேளாண் தொழில் முனைவோராக இளைஞர்களை உருவாக்கும் திட்டம்: விண்ணப்பிக்க இணை இயக்குநர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Welfare ,
× RELATED ரூ.33 கோடி மதிப்பில் வேடங்கிநல்லூரில்...