×

வடமதுரையில் தண்ணீர் தேங்கிய நூற்பாலைக்கு அபராதம்: சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

 

வடமதுரை, டிச. 1: வடமதுரை பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலைகளில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை சுகாதாரத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர் இதில் வடமதுரையில் உள்ள தனியார் நூற்பாலையின் கழிப்பறைகள் சுகாதாரம் இல்லாமல் இருந்தது. மேலும், நீர் தொட்டிகளில் டெங்கு கொசுக்களின் புழுக்கள் அதிகம் இருந்தன. இதையடுத்து நூற்பாலை நிர்வாகத்திற்கு அதிகாரிகள் ரூ.10000 அபராதம் விதித்தனர்.

இந்த ஆய்வு பணிகளில், பழநி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் மருத்துவர் அனிதா உத்தரவின் பேரில் வடமதுரை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமாரசாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், தங்கராஜ், மனோஜ், ரமேஷ் குழுவினர் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், வீடுகள், டீக்கடைகள் மற்ற நிறுவனங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுத்தமாக வைக்க வேண்டும்.

தண்ணீர் சேமிக்கும் உபகரணங்களை கொசுப்புழு உற்பத்தியாகாத வகையில் மூடி வைக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தேங்கியிருக்கும் நீரை வாரம் ஒரு முறை அப்புறப்படுத்த வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களில் சுகாதார நடவடிக்கைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். வடமதுரை வட்டாரத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் உயிரிழப்பு ஏதும் இல்லை’’ என்றனர்.

The post வடமதுரையில் தண்ணீர் தேங்கிய நூற்பாலைக்கு அபராதம்: சுகாதாரத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Dinakaran ,
× RELATED வடமதுரை அருகே வீட்டு கடன் வாங்கி...