×

நகர்நலவாழ்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் வார்டுகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்

சேலம், டிச. 1: சேலம் மாநகராட்சியில் வார்டுகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
இமயவர்மன் (விசிக): அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பட்டியலின மக்கள் திருமணம் நடத்த அனுமதி கொடுப்பதில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். எனது வார்டில் பட்டியலின மக்களுக்காக ஒரு திருமணம மண்டபம் கட்டி தர வேண்டும்.

மேயர்: இதுபற்றி ஆய்வு செய்யப்படும்.
சுஹாசினி (திமுக): எனது வார்டில் நேரு நகர், காந்தி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

தெய்வலிங்கம் (திமுக): மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், சுகாதாரம் சார்ந்த பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. நமக்கு நாமே திட்டப்பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக வந்துள்ள கண்காணிப்பு பொறியாளர் இதை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

திருஞானம் (திமுக): அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் ₹10 கோடிக்கு மேல் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ராமநாதபுரம் ஓடையில் இருந்து ஏரிக்கு வரும் தண்ணீர் அப்படியே தேங்கி ஊருக்குள் நிற்கிறது. அதனை சீர் செய்ய வேண்டும். எனது வார்டில் எரிவாயு தகன மேடை அமைத்து தர வேண்டும்.
மூர்த்தி (திமுக): எனது வார்டில் 13 பாகங்கள் 4 பள்ளிகளில் உள்ளது. அந்த பள்ளிகள் மக்கள் வந்து செல்ல தூரமாக இருப்பதால் அருகில் உள்ள பள்ளிகளிலேயே மாற்றி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஈசன் இளங்கோ (திமுக): மாநகராட்சி சார்பில் சுகாதார பணிகள் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் குப்பைகளை வாகனங்களில் கொடுத்து வருகின்றனர். குப்பையில்லா மாநகரமாக மாற்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நகர்நலவாழ்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். துப்புரவு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவைகளை வார்டு கவுன்சிலர்களும் கண்காணிக்கும் வகையில் அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் சிறப்பு முகாம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது என ஆய்வு செய்ய வேண்டும். சாலைகளில் குப்பைகளை போட்டால் அபராதம் விதிக்க வேண்டும். இரவு நேரங்களில் உணவகத்தில் கழிவுகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிச்சாமி (திமுக): மணியனூர் பகுதியில் மழை தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அதனை சரி செய்ய வேண்டும். நாய்களால் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. அதற்கு சட்டரீதியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன் (திமுக): களரம்பட்டி பகுதியில் பல்வேறு சாலை பணிகள், தரைப்பாலம் போடப்பட்டுள்ளது 56வது வார்டு மற்றும் 45வது வார்டுகளை இணைக்கும் பகுதியிலும் சாலை பணிகளை விரிவுப்படுத்த மேற்கொள்ள வேண்டும்.
கோபால் (திமுக): அம்பாள் ஏரி பணியை விரைந்து முடிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

இதனை தொடர்ந்து ஆளுங்கட்சி தலைவர் தமிழரசன் அனைத்து தீர்மானங்களையும் வாசித்து நிறைவேற்றினார். முன்னதாக கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் சென்று விட்டனர்.

The post நகர்நலவாழ்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் வார்டுகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Corporation ,Council ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை...