×

ரேஷன் பொருட்களுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகம்

தர்மபுரி, டிச.1: தர்மபுரி மாவட்டத்தில், முதல் முறையாக ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை, பேடிஎம் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து, செல்போன் மூலம் ஆன்லைனில் பணத்தை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மாவட்டத்தில் உள்ள 1084 ரேஷன் கடைகளுக்கும் விரிவு படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் கீழ் 1,085 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில், ராகி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 498 முழுநேர ரேஷன் கடைகள், 587 பகுதி நேர ரேஷன் கடைகள் உள்பட 1,085 ரேஷன் கடைகள் மூலமாக 4 லட்சத்து 68 ஆயிரம் 595 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, பல்வேறு இடங்களில் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி தாலுகா, அதகப்பாடி சின்னதடங்கம் செந்தில் நகரைச் சேர்ந்த பகுதி மக்கள், ரேஷன் கடைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சில நாட்களில் பொருட்கள் முழுவதுமாக கிடைக்காத சூழலும் இருந்து வருகிறது.

இதனால் நீண்ட நாட்களாக, பகுதிநேர ரேஷன் கடையை பிரித்துக் கொடுக்க வேண்டும் என செந்தில் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அதகப்பாடி ரேஷன் கடையில் இருந்து 215 குடும்ப அட்டைகளை பிரித்து, செந்தில் நகரில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த ரேஷன் கடையில் தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக, பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்த, க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பேடிஎம், கூகுள்பே மூலம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். இதனால் ரேஷன் கடையின் ஊழியருக்கான சிரமம் குறைந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு சில்லரை தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இன்றைய காலகட்டத்தில் டீக்கடை துவங்கி, நகைக் கடைகள் வரை, வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் யுபிஐ., க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் அரசு அலுவலகங்கள் மற்றும் இணையவழி சேவை மூலம், பண பரிவர்த்தனை செய்யும் வசதி இல்லாமல் இருந்து வந்தது.

இதனால் அரசு அலுவலகங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்களை இணையவழி மூலம் செலுத்த முடியாமல், மக்கள் பணம் கையில் எடுத்துவரும் நிலை இருந்து வந்தது. இதனால் பஸ் பயணம் முதல், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக முதியவர்கள் கையில் பணம் வைத்திருக்கும் போது, தவற விடுகின்ற சூழலும் இருந்து வருகிறது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக க்யூஆர் கோடு ஸ்கேன் மூலம் பணம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டு உள்ளதால் மக்கள் மகிழச்சியடைந்துள்ளனர். இந்த திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 1,085 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் தற்போது ஒரு கடையில் மட்டும், முதல் கட்டமாக அதகப்பட்டி அடுத்த செந்தில்நகர் ரேஷன் கடையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த, க்யூஆர் கோட் ஸ்கேன் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளிலும், இணையவழியில் பணம் செலுத்தும் வசதி விரிவாக்கம் செய்யப்படும். இதனால் கார்டுதாரர்களின் சிரமம் குறைவதுடன், கடையின் ஊழியர்களுக்கும் எளிதாக விடும். ஊழியர்கள் வங்கிக்கு எடுத்துச்சென்று செலுத்தும் சிரமம் குறையும்,’ என்றார்.

The post ரேஷன் பொருட்களுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Paytm ,Dinakaran ,
× RELATED பாப்பாரப்பட்டியில் ராகி விளைச்சல் அமோகம்