×

பார்முலா-4 கார் பந்தயம் தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு

சென்னை: சென்னை தீவுத் திடலை சுற்றி டிசம்பர் 9, 10ம் தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக பார்முலா 4 கார் பந்தய போட்டி நடத்தப்படவுள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், தீவுத்திடல் உள்ளிட்ட சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்துவதற்கு தடை விதிக்க கோரி சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவர் ஹரிஷ் என்பவரும், காஞ்சிபுரத்தை சேர்ந்த லூயிஸ் ராஜ் என்பரும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்களில், பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க உள்ளது. 250 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால் சிகிச்சை பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, 2 நாட்கள் மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை போட்டி நடத்தப்பட உள்ளது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு உள்ளது. ராணுவம், கடற்படையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது, அரசு மருத்துவமனையின் நோடல் அதிகாரியான மருத்துவர் ஆனந்த் குமார், பந்தய வழித்தடம் மருத்துவமனையிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் உள்ளதால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என்று உறுதி அளித்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் பல்வேறு துறைகள், சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவற்றிடம் பெற்ற அனுமதி குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

இதையடுத்து நீதிபதிகள், வேறு யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பிடம் கேள்வி எழுப்பியபோது, ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் அனுமதி அவசியம் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நர்மதா சம்பத் தெரிவித்தார். இவையும் அனுமதி வழங்கியதாக நேற்று அரசு தெரிவித்துள்ளதால், அதுதொடர்பான எழுத்துப்பூர்வமான அனுமதியை பெற்று இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.

The post பார்முலா-4 கார் பந்தயம் தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Formula 4 ,Chennai ,Chennai Island ,South Asia ,
× RELATED சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த ஐகோர்ட் அனுமதி