×

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை

 

ஊட்டி, டிச. 1: ஊட்டியில் உள்ள தார் கலவை தயாரிக்கும் பிளான்ட் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. ஊட்டி அருகே தலையாட்டுமந்து பகுதியில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10 லட்சம் செலவில் தார் கலவை தயாரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட பிளான்ட் அமைக்கப்பட்டது. இந்த தார் கலவை பிளான்ட் துவக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே இயங்கியது.

இங்கு தார் கலவை தயாரிக்கும் போது கரும்புகை எழுந்து அப்பகுதியை சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி தார் கலவை தயாரிக்க கூடாது என வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் இயங்கி வந்த தார் கலவை பிளான்ட் மூடப்பட்டது. அதன்பின், இந்த பிளான்ட் வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படவில்லை. இதனால், இந்த பிளான்ட்டை சுற்றிலும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

தற்போது இந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. மேலும், பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த தார் கலவை தயாரிக்கும் பிளான்டில் உள்ள இயந்திரங்கள் அனைத்தும் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தார் கலவை தயாரிக்கும் பிளான்டை வேறு பயன்பாட்டிற்கு நெடுஞ்சாலை துறையினர் பயன்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்காவில்...