×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 15,000 கனஅடி நீர் திறந்தாலும் சென்னைக்கு பாதிப்பு வராது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 10,000 முதல் 15,000 கன அடி நீர் திறந்தாலும் சென்னை மக்களுக்கு பாதிப்பு வராது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்பட்ட நெருப்புமேடு, செட்டி தெரு, கோதாமேடு, பஜார் தெரு, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், கங்கையம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று களப்பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: சென்னையில் பொதுவாகவே 5 செ.மீ மற்றும் 6 செ.மீ அளவிற்கு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்கும். முதல்வர் எடுத்த துரித நடவடிக்கை காரணமாக பெரிய அளவிலான மழைநீர் தேக்கம் எங்கும் இல்லை. ஓரிரு இடங்களில் சுமார் 25 செ.மீ அளவிற்கு மழை பெய்திருப்பதால் அரை மணி நேரம் மற்றும் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடிந்து விட்டது. எப்போதும் மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளான திருவள்ளுவர் தோட்டம், சுப்பிரமணிய சாலை, ஜெயராம் தெரு, கொத்தவால்சாவடி தெரு போன்ற பகுதிகளில் காலையில் இருந்து ஆய்வு செய்தோம்.

அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்து விட்டது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். முன்பு எல்லாம் மழை வந்தாலே பயப்படும் நிலை மாறி மழை வந்தால் மகிழ்ச்சி அடையும் நிலை பொதுமக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம் வரை கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை அகற்றி அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் மழைநீர் எந்தவித தடங்கலுமின்றி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஆற்றின் அகலம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே 10,000 முதல் 15,000 கன அடி நீர் திறந்தாலும் பாதிப்பு ஏற்படாத நிலை உள்ளது.

கடல் பகுதிகளில் உள்ள முகத்துவாரம் பெரிய அளவில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மழைநீரும் தடையின்றி செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. முதல்வர் உத்தரவின்படி அமைச்சர்கள், மேயர், துணை மேயர், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சுரங்கப்பாதைகளில் உள்ள மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து போக்குவரத்து தடையின்றி செல்கிறது. தற்போது 296 மோட்டார் இயந்திரங்கள் சென்னை மாநகராட்சி சார்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அளவு மழை பெய்தும் கூட 40 மோட்டார் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 15,000 கனஅடி நீர் திறந்தாலும் சென்னைக்கு பாதிப்பு வராது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sembarambakkam Lake ,Chennai ,Minister ,M. Subramanian ,M.Subramanian ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...