×

கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு மூதாட்டியை மிரட்டி நகை, பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வீட்டுக்குள் தனியே இருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரகு(54). முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். இவரது வீட்டின் அருகே ஓடு போட்ட வீட்டில் ரகுவின் தாய் ராணியம்மாள்(65) என்பவர் நீண்ட காலமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் வழக்கம் போல் ரகு, ராணியம்மாள் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளனர்.

இதில், ராணியம்மாள் தனது வீட்டுக்கு தூங்க சென்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் கொட்டும் மழையிலும் முகமூடி அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் ராணியம்மாளின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர், 2 மர்ம நபர்களும் ராணியம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகைகள் மற்றும் அவரது சுருக்குப் பையில் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். பின்னர், அங்கிருந்து சாவகாசமாகத் தப்பித்து சென்றனர். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ராணியம்மாள் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நேற்று காலை ரகு வீட்டுக்கு வந்து ராணியம்மாளிடம் கேட்டபோது, அவரிடம் 2 மர்ம நபர்கள் நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்ற விவரங்கள் தெரியவந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எஸ்ஐ விஜயகுமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் கத்திமுனையில் நகை, பணம் பறித்து சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு மூதாட்டியை மிரட்டி நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,
× RELATED வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக...