×

முதல் முறையாக உலக கோப்பை டி20ல் உகாண்டா: வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வே

விண்தோய்க்: ஐசிசி டி20 உலக கோப்பை 2024ம் ஆண்டு அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவு நாடுகளில் நடைபெற உள்ளது. இதில் விளையாட போட்டியை நடத்தும் அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவு மற்றும் தர வரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகியவை ஏற்கனவே தகுதிப் பெற்று விட்டன. கூடவே நவம்பர் மாத தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளும் இந்த உலக கோப்பையில் விளையாட உள்ளன. இவை தவிர ஆசிய, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா கண்டம் வாரியாக தகுதிச் சுற்று போட்டிகள் மூலம் தலா 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஆப்ரிக்க கண்டத்துக்கான தகுதிச் சுற்று நமிபீயாவின் தலைநகர் விண்தோய்க் நகரில் நடக்கிறது. இதில் ஜிம்பாப்வே, கென்யா, நைஜிரியா, நமீபியா, உகாண்டா, தான்சானியா, ருவாண்டா ஆகிய நாடுகள் விளையாடின. ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட் டங்களில் விளையாட வேண்டிய நிலையில் 5 ஆட்டங்களில் வென்ற நமீபியா தொடர்ந்து 3வது முறையாக உலக கோப்பைக்கு தகுதிப் பெற்று விட்டது. எஞ்சிய ஒரு ஆட்டத்தில் நைஜிரியா உடன் மோதுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் ஜிம்பாப்வே 110 ரன் வித்தியாசத்தில் கென்யாவையும், உகாண்டா 9 விக்கெட் வித்தியாசத்தில் ருவாண்டாவையும் வீழ்த்தின.

இரு அணிகளும் தலா 6 ஆட்டங்களிலும் விளையாடி முடித்துள்ள நிலையில் 5 வெற்றிகளுடன் உகாண்டா 10 புள்ளிகளை பெற்று 2வது இடத்தை பிடித்து உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளது. அதனால் உகாண்டா அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜிம்பாப்வே 6 ஆட்டங்களில் விளையாடி 4 ஆட்டங்களில் மட்டும் வெற்றிப் பெற்று 8புள்ளிகளுடன் 3வது இடத்தைதான் பிடித்தது. இந்த தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி நமீபியா, உகாண்டா அணிகளிடம் மட்டுமே தோற்றது. அதனால் அந்த அணி தொடர்ந்து 3வது முறையாக டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது. கூடவே ஒருநாள் உலக கோப்பையிலும் 2019, 2023ம் ஆண்டுகளில் விளையாட ஜிம்பாப்வே தகுதிப் பெறவில்லை.

The post முதல் முறையாக உலக கோப்பை டி20ல் உகாண்டா: வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வே appeared first on Dinakaran.

Tags : Uganda ,World Cup T20 ,Zimbabwe ,Windhoek ,ICC T20 World Cup 2024 ,USA ,West Indies ,Dinakaran ,
× RELATED ஜிம்பாப்வே – இந்தியா டி20