×

மருந்து தொழிற்சாலையில் ஊழல் முறைகேடு தலைமறைவான நபர் குறித்து 4 பேரிடம் விசாரணை: போலீஸ் ஜீப்பை மறித்து பெண் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஒரு தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வெளிநாட்டுக்கு அந்நிறுவன மருந்து அனுப்பியதில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு தலைமறைவான நபர் குறித்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஒருவரை ஜீப்பில் வெளியே அழைத்து செல்வதை கண்டித்து, அவரது மனைவி திருப்போரூர் காவல் நிலையத்துக்கு வெளியே ஜீப்பை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே ஆலத்தூரில் தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் கொண்ட சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பிரபலமான உயிர்காக்கும் மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து கடந்த 2018-19ம் ஆண்டுகளில் வியட்நாம் நாட்டுக்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏஜென்சியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இருந்துள்ளது. இம்மருந்துகளை வாங்கியதற்கான பணத்தை அப்போதே அந்த தனியார் ஏஜென்சியிடம் வியட்நாம் நிறுவனம் கொடுத்துள்ளது.

எனினும், அந்த சென்னையை சேர்ந்த தனியார் ஏஜென்சியைச் சேர்ந்த சிலர், அப்பணத்தை தங்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது, அந்தத் தனியார் மருந்து தொழிற்சாலை நிறுவனத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின்போது, வியட்நாம் நிறுவனத்திடம் இருந்து ரூ.5 கோடி வரவேண்டியது நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அந்த வியட்நாம் நிறுவனத்திடம் விசாரித்தபோது, சென்னையை சேர்ந்த தனியார் ஏஜென்சி நிறுவனத்திடம் அத்தொகையை வழங்கிவிட்டதாகத் கூறியுள்ளனர்.

இதுகுறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் ஆலத்தூரில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலை நிர்வாகிகள் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த வியட்நாம் நாட்டுக்கு ஏஜென்சியாக செயல்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர் சுந்தர் சிவா என்பவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதற்கிடையே தன்னை வழக்கு விசாரணைக்காக போலீசார் தேடுவதை அறிந்து சுந்தர் சிவா தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவான சுந்தர் சிவாவின் செல்போன் நம்பரை திருப்போரூர் போலீசார் ஆய்வு செய்ததில், அவருடன் தொடர்பில் இருந்த சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த மணிகண்டன், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், விக்னேஸ்வரன் ஆகிய 4 பேரையும் நேற்று காலை திருப்போரூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணைக்காக காவல்நிலையம் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களை மாலைவரை வீட்டுக்கு அனுப்பவில்லை. இதைத் தொடர்ந்து, விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 4 பேரின் உறவினர்கள், வழக்கறிஞர்களுடன் வந்து திருப்போரூர் காவல் நிலையத்தில் விசாரித்தனர். விசாரணையில், அந்த 4 பேர்மீதும் வழக்கு எதுவும் போடப்படவில்லை. தலைமறைவான சுந்தர் சிவா பற்றிய தகவல்கள் தெரிந்தும் மறைப்பதால் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் விசாரணைக்காக 4 பேரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீசார் வெளியே கிளம்பினர். இதை அறிந்ததும் 4 பேரில் ஒருவரான மணிகண்டனின் மனைவி போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்டு, தனது கணவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர், குற்றம் செய்த நபருக்கு தீபாவளி வாழ்த்து மட்டுமே அனுப்பியுள்ளார். இதை வைத்து எனது கணவரை போலீசார் பிடித்து வைத்திருக்கின்றனர் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திருப்போரூர் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

The post மருந்து தொழிற்சாலையில் ஊழல் முறைகேடு தலைமறைவான நபர் குறித்து 4 பேரிடம் விசாரணை: போலீஸ் ஜீப்பை மறித்து பெண் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பரிவேட்டை உற்சவம் விமரிசை