×

நரகத்தைச் சொர்க்கமாக மாற்றிய திருநீறு

ஒருமுறை துர்வாச முனிவர் காலை வேளையில் சிவபெருமானை வழிபட்டு நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு பித்ருலோகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்படி, அவர் செல்லும் வழியில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அந்தக் கிணற்றைத் தன் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்தார். அங்கு பார்த்தவுடன்தான் தெரிந்தது அது கிணறு அல்ல, நரகம் என்று. அந்த நரகத்தில் பல பாவம் செய்த பாவிகள் அல்லல் பட்டுக் கொண்டிருந்தானர்.

அவர்களை விடம் நிறைந்த பாம்பு, பல்லி, அரணை, தேளை போன்ற கொடிய உயிரினங்கள் துன்புறுத்திக்கொண்டிருந்தன. அந்தக் கிணற்றைப் பார்த்துவிட்டு முனிவர் சென்றுவிட்டார். அவர் பார்த்துவிட்டுச் சென்றவுடனேயே அங்கிருந்த பாவிகள், துன்பத்திலிருந்து நீங்கி இன்புற்றனர். கொடிய விலங்குகள் அனைத்தும் பூ மாலைகளாகவும், அமிலமழை, ஆனந்த மழையாகவும் நரகம் சொர்க்கமாகவும் மாறின.

இதைக் கண்ட நரகத்தின் காவலர்களாகிய கின்னரர்கள் அஞ்சி, வியப்படைந்து தமது மன்னனாகிய எமனிடம் சென்று முறையிட்டனர். எமன் எதுவும் அறியாமல் தேவர்களின் தலைவனாகிய இந்திரனிடம் சென்று முறையிட்டார். இந்திரனுக்கும் தெரியாமல் சிவபெருமானிடம் சென்று, நடந்ததைச் சொல்லி முறையிட்டனர். அப்போது, சிவபெருமான் சற்றே புன்னகைசெய்து, ‘‘துர்வாச முனிவர், நரகத்தைப் பார்த்த மாத்திரத்தில் சொர்க்கமாக மாறவில்லை, அவர் நெற்றியில் சாத்திர முறைப்படி நிறைய திருநீறு பூசியிருந்தார்.

அவர் நரகத்தை எட்டிப் பார்க்கும்போது அவருடைய நெற்றியிலிருந்து திருநீற்றின் சிலதுகள்கள் உதிர்ந்து, அந்தக் கொடிய நரகத்தில் விழுந்தன. உடனே, அந்த நரகம் சொர்க்கமாக மாறியது’’ என்றார். ஆகவே, நரகத்தையும் கூடச் சொர்க்கமாக மாற்றும் சிறந்த பொருள் “திருநீறு’’ என்பதை உணர்ந்து நெற்றி நிறைய நீறு பூச வேண்டும். இந்த நிகழ்வு பாவிகளைப் புண்ணியர்களாய் மாற்றும் தன்மை வாய்ந்தது திருநீறு என்பதை வாமதேவ முனிவர் கூறும்,

‘‘…….திருநீற்றின் தன்மை
ஓதற்கு எளிதோ பொல்லா உருவெடுத்து உலகில் தீராப்
பேதுறும் உணர்வின் பாவப் பிணியரே யேனும் தொட்ட
போதிலே புனிதராகிப் பொன்னுலகு அடைவாரன்றே’’
– என்ற பாடலுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

தொகுப்பு; சிவ.சதீஸ்குமார்

The post நரகத்தைச் சொர்க்கமாக மாற்றிய திருநீறு appeared first on Dinakaran.

Tags : Thiruneeru ,Sage Durvasa ,Lord ,Shiva ,Pitrulogam ,
× RELATED திங்கள்கிழமை அன்று விநாயகரை...