×

அதிகாலை வாகன சோதனையில் 2 துப்பாக்கி, 230 குண்டுகள் பறிமுதல்

சென்னை: திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் திருப்போரூர் புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் சென்னை சாந்தோம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் பால் (54) என்பவர் இருந்தார். காரின் டிக்கியில் சோதனை செய்தபோது அங்கு துப்பாக்கி ஒன்றும், ஏர்கன் ஒன்றும் இருந்தது. மேலும், 230 துப்பாக்கி குண்டுகளும் இருந்தன.

இது குறித்து போலீசார் கேட்டபோதுதான் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர் என்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துப்பாக்கி சூடு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றிருப்பதாகவும் பயிற்சி எடுத்துவிட்டு திரும்பும் வழியில் காரில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். அதற்குரிய ஆவணங்களை போலீசார் கேட்டபோது அனைத்து ஆவணங்களும் சென்னை சாந்தோம் உள்ள வீட்டில் இருப்பதாகவும் காமராஜ் பால் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் அவரை திருப்போரூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவரது செல்போன் செல்போனில் துப்பாக்கி உரிமம் பெற்றதற்கான ஆவணங்களும் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர் அட்டையும் வைத்திருந்தது தெரியவந்தது. இருப்பினும் ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும் ஒரிஜினல் உரிமம் ஆகியவற்றை எடுத்து வந்து காண்பித்து விட்டு துப்பாக்கிகளை பெற்றுச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். வீட்டிற்கு சென்று அசல் ஆவணங்களை எடுத்து வந்து காண்பிப்பதாக கூறிச் சென்றவர் வராததால் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிகாலை வாகன சோதனையில் 2 துப்பாக்கி, 230 குண்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Inspector ,Venkatesan ,Tiruporur Police Station ,Tiruporur ,
× RELATED சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி வெட்டிக்கொலை