×

அவிநாசி அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ரூ.22.42 லட்சத்துக்கு ஏலம்

அவிநாசி: அவிநாசி ஒன்றியம் சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ரூ.22.42 லட்சத்துக்கு ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று மாலை நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. மொத்தம் 32025 மெட்ரிக் டன் எடையளவுள்ள 1050 நிலக்கடலை மூட்டைகளை, விவசாயிகள் ஏலமையத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில்,குவிண்டாலுக்கு முதல் ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.8000 முதல் ரூ.8516 வரையிலும், குவிண்டாலுக்கு இரண்டாவது ரகம் (காய்ந்தது) ரூ.7400 முதல் ரூ.7900 வரையிலும், குவிண்டாலுக்கு மூன்றாம் ரகம் (காய்ந்தது)ரூ.6600 முதல் ரூ.7300 வரையிலும், பச்சை ரக நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.2550 முதல் ரூ.5500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 42 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

இதில், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம், அன்னூர், மங்கரசவலையபாளையம், புளியம்பட்டி, மணியக்காரன்பாளையம், சேவூர், நம்பியூர், போத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 150 விவசாயிகளும், திருச்செங்கோடு, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து 8 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். இது குறித்து ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரமோகன் கூறுகையில், விவசாயிகள் நேரடியாக நிலக்கடலையை வியாபாரிகளிடம் விற்று சஷ்டமடைவதை தவிர்த்து, சேவூர் ஒழுங்கு முறைக்கூடத்தில் நடைபெறும் ‘‘இ’’நாம் மறைமுக ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். மறைமுக ஏலத்தின் வாயிலாக அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் தங்களது நிலக்கடலையை, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வாயிலாக விற்று அதிக பயனடையலாம்,’. என்றார்.

The post அவிநாசி அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ரூ.22.42 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Groundnut ,Avinasi ,Avinasi Union Saveur ,Tirupur ,Dinakaran ,
× RELATED அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில்...