![]()
* 2 பெண் ஊழியர்கள் உள்பட 3 பேர், கடத்தல் ஆசாமி கைது
* சினிமா பாணியில் பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடியில் அதிகாரிகள் அதிரடி
மீனம்பாக்கம்: துபாயில் இருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்டு வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்புடைய 7.2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் இந்திய, வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பெண் ஊழியர்கள் உள்பட 3 பேர் மற்றும் கடத்தல் ஆசாமி கைது செய்யப்பட்டனர். சினிமா பாணியில் பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் விமானங்களில் சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவதாகவும், அவற்றை சுங்க சோதனை இல்லாமல், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலர் ரகசியமாக வெளியில் எடுத்து செல்வதாகவும், சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையின் தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தீவிரமாக கண்காணித்தனர். அதில், பயணிகளை விட, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்களை அதிகளவில் கண்காணித்தனர். இதில், பெண் ஒப்பந்த ஊழியர்களும் அடங்குவர். இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் சினேகா (30), சங்கீதா (28) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் தீவிரமாக கண்காணித்தனர்.
அவர்கள் வேலை முடிந்து, வீடுகளுக்கு சென்றனர். அவர்களை ரகசியமாக பின் தொடர்ந்தனர். ஒரு பெண் வீடு பல்லாவரத்திலும், மற்றொரு பெண் வீடு குரோம்பேட்டையிலும் இருந்தன. அவர்கள் வீடுகளுக்கு சென்ற சிறிது நேரத்தில், அதிகாரிகள், இரு குழுக்களாக பிரிந்து சென்று, அவர்களது வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். பாத்ரூம் மற்றும் பீரோக்களில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்க உருளைகள், தங்க பசைகள் போன்றவைகளை கைப்பற்றினர். இருவர் வீடுகளிலும் இருந்து 4.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து 2 பெண்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணிகள், விமானங்களில் கடத்தி வரும், தங்கத்தை ரகசியமாக இவர்கள் வாங்கி, தங்களது உள்ளாடைகளுக்கு மறைத்து வைத்து, சுங்க சோதனை இல்லாமல், வீடுகளுக்கு கொண்டு வந்தது விடுவார்கள். பின்னர் கடத்தல் கும்பலின் ஏஜென்ட்கள் வந்து தங்கத்தை வாங்கிச் செல்வார்களாம். இதையடுத்து 2 பெண்களையும் தங்களது காவலில் வைத்து கொண்டு, தொடர்ந்து கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில், இந்த பெண்களிடம் இருந்து தங்கத்தை வாங்குவதற்காக கடத்தல் ஆசாமி ஒருவர், பெண்களின் வீடுகளுக்கு வந்தார்.
அவரை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் முகமது ஹர்ஷத் (27). புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் என்பவரது வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்கள் மற்றும் முகமது ஹர்ஷத் ஆகியோருடன் மண்ணடியில் உள்ள கலையரசன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த 1.5 கிலோ தங்கம் மற்றும் இந்திய பணம் ரூ.45 லட்சம், அமெரிக்க டாலர் ரூ.5 லட்சம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் கலையரசனையும் (30) கைது செய்தனர். இவர்தான் தங்கம் கடத்தும் ஆசாமிகளை, இந்த 2 பெண்களுக்கு, அறிமுகம் செய்து வைத்தவர் என்றும் தெரியவந்தது. 4 பேரையும் சென்னை தி.நகரில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் சோதனையை தொடங்கிய அதிகாரிகள், சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை எடுத்து, பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தி, 7.2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் மதிப்புடைய வெளிநாடு மற்றும் இந்திய பணம் என மொத்தம் ரூ.5 கோடி மதிப்புடைய தங்கம், பணத்தை பறிமுதல் செய்ததோடு 4 பேரை, சங்கிலி தொடர்போல் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கடத்தலில் வேறு யாராவது உடந்தையாக உள்ளார்களா? எவ்வளவு தங்கம் கடத்தி வந்தனர் என்பது போன்ற பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கடத்தல் ஆசாமிகளுக்கு ஒப்பந்த ஊழியர்கள், அதிலும் பெண் ஊழியர்கள் கைது செய்யப்படுவது, சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post துபாயில் இருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்டு வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்புடைய 7.2 கிலோ தங்கம் ரூ.50 லட்சம் இந்திய, வெளிநாட்டு பணம் பறிமுதல் appeared first on Dinakaran.
