×

கோடை சீசனுக்கு தயாராகிறது அரசு தாவரவியல் பூங்கா

*5 லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தி தீவிரம்

ஊட்டி : கோடை சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தியில் தோட்டக்கலைத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப்பகுதிகளில் நிலவும் வெயிலை தாங்க முடியாமல் குளுமையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பது வாடிக்கை. இச்சமயங்களில், அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.

இதனை காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை அனைத்து பூங்காக்களில் பல வகையான மலர்கள் பூக்கும் வகையில் பல லட்சம் மலர் செடிகளை முன்னதாகவே நடவு செய்து, அதில் மலர்கள் பூத்துக் காணப்படும். மேலும், தமிழகம் மாளிகை பூங்கா, குன்னூர் காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் புதிதாக, அதே சமயம் பல வகையான மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கம். இதற்காக ஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாற்று உற்பத்தி செய்யப்படும். நாற்றுகள் உற்பத்தியானவுடன் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடவு பணிகள் துவங்கும்.

மேலும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, இந்த நாற்றுகள் தயாரானாவுடன் பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் நடவு செய்யப்படும். மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படும். இது தவிர பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகவும் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படும். பின், இந்த மலர் செடிகள் பூக்கும் காலத்திற்கு ஏற்றவாறு டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பூங்கா முழுவதிலும் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, தற்போது நாற்று உற்பத்தியில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடவு செய்வதற்காக தற்போது பூங்கா நர்சரிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. கடந்த மாதம் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்வேறு வகையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவைகள் நன்று வளர்ந்தவுடன், அவைகள் வளரும் காலத்திற்கு ஏற்றவாறு அடுத்த மாதம் இறுதி முதல் நடவு பணிகள் துவக்கப்படவுள்ளது. நடவு பணிகளுக்காக தற்போது பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளும் தயார் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post கோடை சீசனுக்கு தயாராகிறது அரசு தாவரவியல் பூங்கா appeared first on Dinakaran.

Tags : Govt Botanical Garden ,Ooty ,Ooty Botanical Garden ,Government ,Botanical ,Garden ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...