×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 37,177 பேர் ஆர்வம்

சேலம், நவ. 28: சேலம் மாவட்டத்தில் நடந்த 4 சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 37,177 பேர் ஆர்வத்துடன் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் கடந்த மாதம் 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கலெக்டர் கார்மேகம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 14,41,717 பேர், பெண் வாக்காளர்கள் 14,50,621 பேர் மற்றும் இதரர் 271 பேர் என, மொத்தம் 28,92,609 பேர் இடம்பெற்றிருந்தனர்.

தொடர்ந்து, அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள், டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில், தகுந்த ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, கடந்த 4, 5ம் தேதிகளிலும், 25 மற்றும் 26ம் தேதிகளிலும் என மொத்தம் 4 நாட்கள், சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,257 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தங்கள் மேற்கொள்ள 63,949 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் பலர் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். குறிப்பாக, 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் இளம் வாக்காளர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை நடந்துள்ள 4 சிறப்பு முகாம்களில் மட்டும் 18 வயதை பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் என 37,177 ேபர், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க படிவம் 6-ஐ வழங்கியுள்ளனர்.
அத்துடன், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் என பெயரை நீக்கம் செய்வதற்கு 7,621 பேரிடம் இருந்து படிவம் 7 பெறப்பட்டுள்ளது. இதுதவிர குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் என 19,151 பேர் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.

அதிகபட்சமாக கடந்த 5ம் தேதியன்று நடந்த முகாமில் மட்டும், 23,889 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் டிசம்பர் 9ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜனவரி 5ம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 37,177 பேர் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...