×

பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்: சரமாரியாக கற்களை வீசியதால் பயணிகள் அலறல்

பெரம்பூர்: சென்னையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அடிக்கடி பேருந்து மற்றும் ரயில்களில் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே பெரம்பூர், பேசின் பிரிட்ஜ், கடற்கரை ரயில் நிலையங்களில் 2 கல்லூரிகளின் மாணவர்கள் மோதிய வழக்குகளில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வகையில் நேற்று காலை பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திலும் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை சென்ட்ரல் நோக்கி கிளம்பிய மின்சார ரயில் காலை 9.15 மணியளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டியின் மீது சரமாரியாக கற்களை வீசினர். பதிலுக்கு எதிர் தரப்பிலும் கற்களை வீசியுள்ளனர். இதில், சுமார் 40க்கும் மேற்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் நடைபாதையில் ஓடிச் சென்று தொடர்ந்து கற்களை எறிந்ததால் பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மின்சார ரயிலில் இருந்த கதவுகளை மூட முயற்சி செய்தனர். ஆனால் பல கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில கல்லூரி மாணவர்களுக்கு சிறிய அளவிலான காயம் மட்டுமே ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் ரயில்வே போலீசார், உடனடியாக பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தகவல் கூறி அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசாரை உஷார் படுத்தினர். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே கலைந்து சென்றனர். சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்: சரமாரியாக கற்களை வீசியதால் பயணிகள் அலறல் appeared first on Dinakaran.

Tags : Perambur Loco railway station ,Perambur ,Chennai ,
× RELATED சென்னை வில்லிவாக்கத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவர் கைது!!