×

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 2 கடைகளுக்கு அபராதம்; 22 கிலோ இறைச்சி பறிமுதல்

 

திருப்பூர், அக்.2: திருப்பூர் பாண்டியன்நகரில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.1000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 22 கிலோ இறைச்சியையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் நேற்று பாண்டியன்நகர் பகுதிகளில் உள்ள ரோட்டோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 2 கடைகளில் இறந்த கோழிகளை சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2 கடைகளிலும் இருந்த 22 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், 2 கடைகளுக்கும் தலா ரூ.1000 ஆயிரம் வீதம் 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், இதுபோன்று இறந்த கோழி இறைச்சியை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது: பாண்டியன்நகரில் உள்ள ரோட்டோர இறைச்சி கடைகளில் இறந்த கோழியில் செயற்கை நிறமி மற்றும் மஞ்சள் பொடி போட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனால் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்கள் கோழிகளை வாங்கும் போது, சுத்தமானதாக வாங்க வேண்டும். நமது கண் முன்னே உயிருடன் இருக்கும் கோழிகளை வெட்டி இறைச்சி வாங்கி செல்ல வேண்டும். இறந்த கோழிகளின் தோல் மிகவும் கடினமாக இருக்கும். இதனை பொதுமக்கள் கவனித்து வாங்க வேண்டும். மேலும், இது தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 2 கடைகளுக்கு அபராதம்; 22 கிலோ இறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Pandyannagar ,Dinakaran ,
× RELATED தந்தை இறந்ததால் ரயில் முன் பாய்ந்து சிறுவன் தற்கொலை