துப்பாக்கிச்சுடுதல் போட்டியை தொடர்ந்து, குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மகளிர் குத்துச்சண்டை 54 கிலோ பிரிவு காலிறுதியில் நேற்று களமிறங்கிய இந்தியாவின் பிரீத்தி பவார் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை ஜய்னா ஷீகர்பேகோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பிரீத்தி உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் அவர் தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்சில் வெண்கலம் வென்றவரும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையுமான லவ்லினா போர்கோஹைன்நேற்று 75 கிலோ எடை பிரிவு காலிறுதியில் களமிறங்கினார். அதில் தென் கொரிய வீராங்கனை சூயோன் சியோங்கை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அதிரடியாக சாய்த்தார். அதன்மூலம் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலத்தை உறுதிப்படுத்தியதுடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். மகளிர் குத்துச்சண்டை பிரிவில் ஏற்கனவே இந்திய வீராங்கனை நிக்கத் ஜரீனும் தான் பங்கேற்ற பிரிவில் பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார். அதேபோல் 57 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எதிரணி வீரர் பங்கேற்காததால் இந்திய வீரர் சாசின் சிவாச் காலிறுதிக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.
The post பாக்சிங்கில் பதக்க வேட்டை வாய்ப்பு பிரகாசம் appeared first on Dinakaran.