
கரூர், செப். 29: கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சமக்ரசிசாவுடன் இணைந்து 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சன்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள், பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.
அதன்படி, அக்டோபர் 3ம் தேதி கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 5ம் தேதி கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 6ம் தேதி அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 10ம் தேதி க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 12ம் தேதி தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 13ம் தேதிம, லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 17ம்தேதி, குளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 19ம்தேதி தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில், மருத்துவச்சான்று வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த குறிப்பிட்ட உதவிகளை பெற ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது இருப்பிடச் சான்று ஆகியவை கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். எனவே, கருர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.