
சேலம், செப்.29:சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம் ₹30 ஆயிரம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (45), தனியார் ஊறுகாய் கம்பெனி ஊழியரான இவர், நேற்று முன்தினம் சேலம் வந்தார். சேலத்தில் உள்ள பல்வேறு கடைகளில் ஆர்டர் எடுத்துக் கொண்டு, மீண்டும் சென்னை திரும்ப சேலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு இரவில் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு நின்றிருந்த ஒரு திருநங்கை, கணேசிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் கணேசை அழைத்துக் கொண்டு திருநங்கை வெளியே சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கணேஷ், தன்னை வெளியில் அழைத்துச் சென்ற திருநங்கை, தனது ஏடிஎம் கார்டை பறித்து, அதில் இருந்து ₹30 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகார் கொடுத்தார். இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார், தனியார் நிறுவன ஊழியரிடம் ₹30 ஆயிரம் பறித்த திருநங்கை குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பஸ் ஸ்டாண்டிற்குள் அதே திருநங்கை மீண்டும் வந்து நின்றிருந்தார்.
உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர், ரெட்டியூர் கனரா பேங்க் காலனியை சேர்ந்த திருநங்கை ராஜேஸ்வரி (27) எனத்தெரியவந்தது. பின்னர், தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்ததாக வழக்குப்பதிவு செய்து, திருநங்கை ராஜேஸ்வரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹30 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த தனியார் நிறுவன ஊழியரை அழைத்துச் சென்று திருநங்கை பணம் பறித்த இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தனியார் நிறுவன ஊழியரிடம் ₹30 ஆயிரம் பறித்த திருநங்கை appeared first on Dinakaran.