×

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இன்று கோலாகல தொடக்கம்: பதக்க வேட்டை முனைப்பில் இந்தியா

ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஆசிய நாடுகளுக்கிடையே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தொடர், சீனாவில் கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடக்கிறது. ஹாங்சோவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கும் போட்டி அக்.8ம் தேதி நிறைவடைகிறது. தொடக்க விழாவில் பங்கேற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் போட்டியை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா என 45 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மொத்தம் 40 வகையான விளையாட்டுகளில், 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் ஹாங்சோ நகரில் 56 இடங்களில் நடத்தப்படும். போட்டியில் சுமார் 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள், அலுவலர்கள், உதவியாளர்களும் சீனா சென்றுள்ளனர். போட்டித் தொடர் அதிகாரப்பூர்வமாக இன்று தான் தொடங்குகிறது என்றாலும்… கால்பந்து, மகளிர் கிரிக்கெட், வாலிபால், படகு போட்டி உள்பட பல்வேறு குழு போட்டிகள் ஏற்கனவே செப்.19 முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 655 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பிரமாண்ட அணி பதக்க வேட்டையில் களமிறங்குகிறது. கடந்த 18 போட்டிகளில் இந்தியா 2018ல் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில்தான் அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்றுள்ளது. அந்த சாதனையை இந்தியா இம்முறை முறியடித்து, பதக்க வேட்டையில் முதல் முறையாக சதம் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* தொடக்க விழா

ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைக்க உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக கம்போடிய மன்னர் நரோடோம் சிஹாமணி, சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால், நேபாள பிரதமர் புஷ்ப கமல், தென் கொரியா பிரதமர் ஹான் டக் சோ உள்பட பலர் பங்கேற்கின்றனர். சீனாவின் கலாச்சார பெருமை, வரலாற்று சின்னங்கள், இயற்கை வளங்கள், தனித்துவமான இசை, நடனம் உள்ளிட்டவற்றை பறைசாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு, முப்பரிமாணம், மெய்நிகர் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நடத்தப்பட உள்ள கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்த உள்ளன.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான சுடரை ஏற்றும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் ‘டிஜிட்டல்’ முறையில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பூலோக சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் ஹாங்சோ நகரில் உள்ள ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் மைய அரங்கில் தான் தொடக்க விழா நடைபெற உள்ளது. 2018ல் திறக்கப்பட்ட இந்த அரங்கில் திறந்து மூடும் வகையிலான பிரமாண்ட கூரை, வட்ட வடிவிலான எல்இடி திரை, 80 ஆயிரம் இருக்கைகள் உள்பட அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி மாலை 5.30க்கு தொடங்கி நடைபெற உள்ளன.

* நம்பிக்கை நட்சத்திரங்கள்

ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஹாக்கி, கபடி, கிரிக்கெட், துப்பாக்கிசுடுதல், வில்வித்தை, தடகளம், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், செஸ், டென்னிஸ், பளுதூக்குதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்க மகன் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பிரக்ஞானந்தா, குகேஷ், எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித், குஜராத்தி, கோனெரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, வந்திகா, சவிதா ஆகியோர் இடம் பெற்றுள்ள செஸ் அணியும் பதக்க நம்பிக்கையை கொடுத்துள்ளது. வாள்வீச்சில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேட்மின்டனில் எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி, காந்த், லக்‌ஷியா சென், பி.வி.சிந்து உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கினாலும், கடும் போட்டியை எதிர்கொள்கின்றனர்.

* அருணாச்சல் வீரர்களுக்கு விசா மறுப்பு அமைச்சர் அனுராக் தாகூரின் சீன பயணம் திடீர் ரத்து

ஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய வுஷு அணியில் இடம் பெற்றிருந்த அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த வீராங்கனைகள் நைமன் வாங்சு, ஒனிலு டெகா, மெபுங் லாம்கு ஆகியோருக்கு விசா வழங்க சீன அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் அந்த 3 வீராங்கனைகளும் ஹாங்சோ செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சீன அரசின் இந்த விஷமத்தனமான நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹாங்சோ தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், இந்திய அரசின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார். ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டை சேர்ந்த ஒரு பகுதியாக சீனா வரைபடம் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

The post 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இன்று கோலாகல தொடக்கம்: பதக்க வேட்டை முனைப்பில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : 19th Asian Games ,China ,India ,Hangzhou ,Hangzhou, China ,Dinakaran ,
× RELATED சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவல்:...