
ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் 9 ஆண்டுகளுக்கு பிறகு டி20கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது. மகளிர் பிரிவிலும் முதல்முறையாக களம் கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதிப் பெற்றன. தகுதிச் சுற்றில் மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங் அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் காலிறுதிக்கு முன்னேறின. ஹாங்சோவில் நேற்று நடந்த முதல் காலிறுதியில் இந்தியா-மலேசியா மகளிர் அணிகள் களம் கண்டன. டாஸ் வென்ற மலேசியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி 5.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ஓவர்களின் எண்ணிக்கை 15 ஆக மாற்றப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 15 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173ரன் குவித்தது. கேப்டன் மந்தானா 27, ஷபாலி 67, ஜெமீமா 47*, ரிச்சா 21* ரன் எடுத்தனர். அதனையடுத்து 15ஓவரில் 174ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மலேசிய கேப்டன் வின்ஃபிரட் துரைசிங்கம், ஹமிசா ஹசீம் களமிறங்கினர். ஆளுக்கொரு பந்தை சந்தித்து, மலேசியா 2பந்துகளில் ஒரு ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
அப்போது நிறுத்தப்பட்ட ஆட்டம் மழை நிற்காததால் கைவிடப்பட்டது. அதே அரங்கில் நடைபெற இருந்த பாகிஸ்தான்-இந்தோனேசியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது காலிறுதி ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இப்படி 2 காலிறுதி ஆட்டங்கள் கைவிடப்பட்டாலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரவரிசைப்படி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் சுற்றில் வெற்றிப் பெற்றும், மலேசியா, இந்தோனேசியா அணிகள் காலிறுதியில் ஆடாமலேயே விடை பெற்றன.
The post ஆட்டம் போட்ட மழை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் appeared first on Dinakaran.