திருவண்ணாமலை, செப்.17: திருவண்ணாமலையில் அரசு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து அதிகாரிகள் மீட்டனர். திருவண்ணாமலை- மணலூர்பேட்டை சாலையில் நகராட்சிக்கு உட்பட்ட எல்லையில் உள்ளது பழமை வாய்ந்த திருவண்குளம். போதுமான பராமரிப்பு இன்றி முட்புதற் சூழ்ந்து இந்த குளம் பயனற்று கிடைக்கிறது. இக்குளம் மற்றும் குளத்தை சுற்றி உள்ள ஒரு வெவ்வேறு சர்வே எண்களுக்கு உட்பட்ட 4.70 ஏக்கர், 3.75 ஏக்கர் மற்றும் 2.40 ஏக்கர் உட்பட சுமார் 10 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை திருவண்ணாமலை கல்குதிரை தர்கா தெருவை சேர்ந்த சிலர் நீண்ட காலமாக ஆக்கிரமித்து உள்ளனர்.
மேலும், இந்த இடத்துக்கு பட்டா கேட்டு வழக்கும் தொடர்ந்து உள்ளனர். இந்நிலையில், நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, நேற்று டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, தாசில்தார் சரளா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்டனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு 10 ஏக்கரின் தற்போதைய சந்தை மதிப்பு ₹50 கோடி இருக்கலாம் என தெரிகிறது. மேலும், அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்வது சட்ட விரோதம் என்று தகவல் பலகை வைத்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்கும் நடவடிக்கை முன்னிட்டு டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
The post பல கோடி ரூபாய் மதிப்புள்ள 10 ஏக்கர் குளம், நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு அதிகாரிகள் மீட்டனர் திருவண்ணாமலையில் அரசுக்கு சொந்தமான appeared first on Dinakaran.
