×

இன்று நடக்கவிருந்த சிறுமி திருமணம் நிறுத்தம் அதிகாரிகள் நடவடிக்கை செய்யாறு அருகே

செய்யாறு, செப்.17: செய்யாறு அருகே இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியை திருவண்ணாமலை பெண்கள் காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த உறவினரின் மகனான 21 வயது இளைஞருக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் நிச்சயம் செய்திருந்தனர். அதன்படி, இன்று காலை மாப்பிள்ளை உள்ள ஊரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

முன்னதாக, திருமண வரவேற்பு அழைப்பிற்காக பெண்ணை மணக்கோலத்தில் அலங்கரித்து மாப்பிள்ளை ஊரான அந்த கிராமத்திற்கு அழைத்து செல்ல நேற்று மாலை தயாராக இருந்தனர். அப்போது, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தகவலின்பேரில், மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலர் அஞ்சலா தலைமையில் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலக சமூக நலத்துறை அலுவலர் சர்மிஸ்ரா மற்றும் மோரணம் போலீசார் உதவியுடன் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். பின்னர், 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என கூறி பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, சிறுமியை திருவண்ணாமலை பெண்கள் காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். சிறுமியின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டிலும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

The post இன்று நடக்கவிருந்த சிறுமி திருமணம் நிறுத்தம் அதிகாரிகள் நடவடிக்கை செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Tags : Seyyar ,social welfare department ,
× RELATED மலர் சாகுபடி நிலையம் அமைக்க வேண்டும்...