×
Saravana Stores

இதயம் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒரு மனிதன் உயிர்வாழ, ஆதாரமாக இருப்பது இதயம். ஆனால் அந்த இதயத்தின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்துகிறோமா என்றால், கேள்விக்குறிதான். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதயநோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

மேலும், நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இதன் காரணமாகவே, இதயம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி அன்று ‘உலக இதய தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாப்பது குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்குகிறார் இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கோவினி.

திடீர் இதய நிறுத்தம் (கார்டியாக் அரஸ்ட்) என்றால் என்ன.. எதனால் ஏற்படுகிறது…

பொதுவாக ஹார்ட் அட்டாக் எனும் இதய அடைப்பு முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதித்து வந்தது. ஆனால், சமீபகாலமாக, 30- 40 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கும் இதயப் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாக, திடீர் இதயநிறுத்தம் ( sudden cardiac arrest) என்பது அதிகரித்துள்ளது.

அதாவது, ஒருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல், இதய செயல்பாடு திடீரென்று முற்றிலும் நிற்பதாகும். இருதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்வதற்கு முக்கிய மூன்று ஆர்ட்டரிஸ் (Arteries) இருக்கும். அதில், இடது கரோனரி ஆர்ட்டரிஸ் (left coronary arteries), வலது கரோனா ஆர்ட்டரிஸ்(right coronary arteries) என இரண்டு பக்கமும் இருக்கும். இந்த இரண்டு ஆர்ட்டரிஸும் பல கிளைகளாக பிரிந்து செல்லும். இந்த இரண்டு ஆர்ட்டரிஸும் திடீரென அடைபடுவதால், இதயம் துடிப்பதை சட்டென நிறுத்திவிடும். இந்நிலையைத்தான் திடீர் இதயம் நிறுத்தம் என்று
சொல்கிறோம்.

சில நேரங்களில், ஒரு பக்கம் மட்டும் அடைப்பு ஏற்பட்டால், நாம் மருத்துவமனை செல்வதற்கான அவகாசம் கிடைக்கும். ஆனால், இரண்டு பக்க வால்வுகளுமே ஒரே நேரத்தில் சட்டென அடைபடும்போது, திடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு, மரணம் நிகழ்கிறது. குறிப்பாக, இதயத்திற்கு செல்லும் இந்த இரண்டு ரத்தநாளங்களிலும் 70 சதவிதம் வரை அடைபட்டுவிட்டால் திடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.

இதை மேஸிவ் ஹார்ட் அட்டாக் என்றும் சொல்வோம். இந்த மேஸிவ் அட்டாக் ஏற்பட்டவர்கள், 60 சதவீதம் மருத்துவமனையை அணுகும்முன்பே இறந்துவிடுவார்கள். எனவே, திடீர் மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக, முதல் ஆறு நிமிடங்களுக்குள் கார்டியோபுல்மனரி புத்துயிர் சிகிச்சை கொடுக்கப்பட்டால், கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

எதனால் ஏற்படுகிறது என்றால், தினசரி உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற உணவுமுறை ( எண்ணெய் உணவுகள், கொழுப்பு உணவுகள் அதிகம் உண்பது), உடல் பருமன் , கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய், மன அழுத்தம் போன்ற காரணங்களால் ரத்தநாளங்கள் அடைபட்டு, திடீர் கார்டியாக் அரஸ்ட் ஏற்படுகிறது.
கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..

இதயம் ஒரு மோட்டார் பம்ப் மாதிரியானது. அதாவது, நமது உடலில் இருக்கும் ரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு சென்று ரத்தத்தில் உள்ள அழுக்குகளை வடிகட்டி நல்ல ரத்தத்தை மீண்டும் இதயத்துக்கு கொண்டு வந்து உடலுக்கு சப்ளை செய்கிறது. எனவே, மோட்டார் பம்ப் மாதிரி இதயம் செயல்படுகிறது. திடீரென இந்த பம்ப் கெட்டு அடைபட்டுவிட்டால், உடனடியாக எல்லாமே நின்றுவிடும். இதைத்தான் திடீர் கார்டியாக் அரஸ்ட் என்கிறோம். ஆனால், மாரடைப்பு ( Heart Attack) என்பது இதயத்திற்கு ஆக்சிஜனை வழங்கும் ரத்த நாளங்கள் தடுக்கப்படும் போது மாரடைப்பு நிகழ்கிறது. ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் ஏற்படும் போது அது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கிறது. இவைதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அதாவது திடீர் அரஸ்ட் இதயத்திற்கு மேல் பகுதியில் ஏற்படுகிறது. மாரடைப்பு இதயத்திற்குள் ஏற்படுகிறது.

திடீர் கார்டியாக் அரஸ்ட்டின் அறிகுறிகள் என்ன ..

ஒருவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கு முன்புவரை அவர் சாதாரணமாக, நார்மலாகத்தான் இருப்பார். சிலருக்கு திடீரென்று நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு நெஞ்சுப் பகுதியில் அழுத்தமாக இருப்பது போன்று தோன்றும். சிலருக்கு கேஸ்ட்ரிக் பிரச்னை போன்றுதான் இருக்கும். எனவே, அந்த நபர் சாதாரணமாகத்தான் நினைப்பார். ஆனால் இந்த அறிகுறிகள் ஏற்பட்ட சில மணி நேரத்தில், திடீரென்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும்.

சிலருக்கு தொடர் இருமலாக வரும். சிலருக்கு நெஞ்சில் ஒரு டன் வெயிட்டை வைத்து அழுத்துவது போன்று தோன்றும். இவை ஏற்பட்ட சில நிமிடங்களில் இதயம் செயலிழந்து நின்றுபோய்விடும். இவைதான் திடீர் கார்டியாக் அரஸ்டின் அறிகுறிகளாகும். அதுவே, ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் என்றால், ரத்தநாளத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்படும்போது, நெஞ்சுவலி, கழுத்துவலி, அதிகமாக வியர்ப்பது போன்ற உணர்வுகள் ஏற்படும். அந்தநேரத்தில், எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகளும் இருக்கும். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுகி இதனால் ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்வது நல்லது.

திடீர் கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் உள்ள சிகிச்சை முறைகள் ஒன்றுதானா அல்லது வித்தியாசப்படுமா..

திடீர் கார்டியாக் அரஸ்ட்டை பொருத்தவரை, குறைந்தபட்சம் 30-40 சதவீதம் பேர்தான் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. மீதம் 60 சதவீதம் பேர் மருத்துவமனை வருவதற்குள்ளாகவே மரணித்துவிடுகிறார்கள். எனவே, ஏன் திடீர் முடக்கம் ஏற்பட்டது என்பதைக் கண்டறிவதே கடினம். இதைத் தாண்டி இக்கட்டான சூழலில் மருத்துவமனை வருபவர்களுக்கு உடனடியாக எலக்டிரிக்கல் ஷாக் சிகிச்சை கொடுத்து, உடனடியாக ஆன்ஜியோ செய்து பார்த்துவிட்டு, அதற்குத் தகுந்தவாறு சிகிச்சையை தொடருவோம். இதுதான் திடீர் கார்டியாக் அரஸ்ட்டுக்கு கொடுக்குப்படும் சிகிச்சை முறைகள்.

ஹார்ட் அட்டாக்கை பொருத்தவரை, நெஞ்சுவலி, வியர்த்தல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும்போதே அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டால், தேவையான முதலுதவி அளிக்கப்பட்டு, தற்போதுள்ள நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை உடனடியாக மேற்கொண்டு பிழைக்க வைத்துவிடலாம். அந்தவகையில், இதற்கு முதல் சிகிச்சை என்றால், ஈசிஜி செய்வது, ஆன்ஜியோகிராம் செய்வதுதான். தற்போது ரோபாடிக் சர்ஜரியும் நல்ல பலனை தருகிறது.

கார்டியாக் அரஸ்ட் ஏற்படும்போது, உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி என்ன..

திடீரென ஒருவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்படும்போது உடனடியாக நாம் செய்ய வேண்டியவை என்னவென்றால், கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்ட முதல் ஆறு நிமிடங்கள் மிகவும் முக்கியமானது. எனவே, கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்ட முதல் ஆறு நிமிடங்களுக்குள் கார்டியோபுல்மனரி (CPR) புத்துயிர் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். அதாவது, பாதிக்கப்பட்ட நபரின் மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி அழுத்தம் கொடுப்பதனால், இதயம் மூளைக்கு ரத்தத்தை செலுத்துவதை தூண்டுகிறது. அடுத்து உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரை காப்பாற்றலாம். இந்த முதலுதவி செய்யப்படாவிட்டால் நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

தற்காத்துக்கொள்ளும் வழிகள்..

தினசரி அரைமணி நேரமாவது உடற் பயிற்சி செய்வதை கட்டாயப்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, பல நோய்களில் இருந்து நம்மைக் தற்காத்துக்கொள்ள முடியும். ஆனால் சிலர், அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்லும்போது கூட நடந்து செல்லாமல், டூவீலரை பயன்படுத்துகின்றனர். அப்படியில்லாமல், நடந்து செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். சர்க்கரைநோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மனஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். இந்த ஐந்து காரணிகளும்தான் இதய அடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும். எனவே, அவற்றில் கவனம் செலுத்தினாலே பெரும்பாலான இதயப் பிரச்னைகள் வராமல் தற்காத்துக்கொள்ள முடியும்.

இது தவிர சிலருக்கு பரம்பரை வழியாக இதய பிரச்னை இருந்திருக்கலாம். அதாவது, குடும்பத்தில் இருப்பவர்களோ அல்லது நெருங்கிய உறவுகளோ ஹார்ட் அட்டாக்கில் இறக்க நேர்ந்திருந்தால், அந்த பரம்பரையில் வந்தவர்கள். 30 வயதுக்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்கு முறை ஹார்ட் செக்கப் செய்துகொள்வது நல்லது. அதுபோன்று ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வதும் நல்லது. இவையெல்லாம் சரிவர பராமரித்துக் கொண்டாலே, இதய பிரச்னைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post இதயம் காப்போம்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Doctor ,Dinakaran ,
× RELATED சிறுகதை-வெற்றுக் காகிதம்!