மலைப்பகுதியில் தொடர் சாரல் குற்றால அருவிகளில் கொட்டுகிறது:சுற்றுலா பயணிகள் குஷி

குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குற்றாலத்தில் 2 நாட்களாக சாரல் பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த ஐந்து தினங்களாக இதமான சூழலுடன் பகல் மற்றும் இரவு வேளைகளில் சாரல் நன்றாக பெய்து வந்த போதும் மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும் பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் குறைவாக தண்ணீர் விழுகிறது. கடந்த சில தினங்களாக அருவிகளில் தண்ணீர் சரிவர இல்லாத காரணத்தால் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே உள்ளது. இதனால் அனைத்து அருவிகளிலும் இன்று காலை வரிசையின்றி குளித்தனர். மீண்டும் சிறிய இடைவெளிக்குப் பிறகு சாரல் பெய்ததாலும் அருவிகளில் தண்ணீர் விழுவதாலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!