பாலசோர்: ஒடிசாவில் நேற்று நடந்த கோர விபத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டன. பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் விபத்தில் சிக்கியதில் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இடிபாடுகளில் சிக்கி 233 பயணிகள் பலியாகிவிட்டனர். 900க்கும் அதிகமான பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவ அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒடிசா விரைந்துள்ளது.
பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் இந்த ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளம் மீது விழுந்தது. இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் இரவு 7.20 மணிக்கு அந்த வழியாக கொல்கத்தா ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தது. தண்டவாளத்தில் கிடந்த பெங்களூரு ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டன. அதில், 7 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கின. இதில் சில பெட்டிகள் அருகில் மூன்றாவது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில சரக்கு ரயிலும் தடம் புரண்டருது. இந்த விபத்தில் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் ஏராளமான பயணிகள் சிக்கிக்கொண்டனர். 900 பயணிகளுக்கு மேல் காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியானது. இரவு நேரம் என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்கிழக்கு ரயில்வே சார்பில் மீட்பு ரயில் உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றது.
மேலும் ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை குழுவும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து வனப்பகுதியில் நடந்ததால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சர் பிரமிளா மாலிக், சிறப்பு மீட்பு கமிஷனர் ஆகியோர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒடிசா தீயணைப்பு படை தலைவர் சுதாகன்சூ சாரங்கி சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். ரயிலில் வந்தவர்களும், அந்த பகுதியில் உள்ள மக்களும் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே 3 தேசிய பேரிடர் மீட்பு படை, 4 ஒடிசா பேரிடர் படையும் வந்து சேர்ந்தது. 60 ஆம்புலன்ஸ்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பாலசோர், கட்டாக் உள்பட 3 மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உஷார் படுத்தப்பட்டன. இந்த விபத்தில் 233 பயணிகள் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன. படுகாயம் அடைந்த 900க்கும் மேற்பட்டவர்கள் பாலசோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு பாலசோர் விரைந்துள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு: ரயில் விபத்து குறித்து தகவல்களை அளிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்கள் இலவச அழைப்பு எண் 1070, செல்போன் எண்- 94458 69843, வாட்ஸ் அப் எண்- 94458 69848, 044-2859 3990. இதுதவிர, ஹவுரா 033-26382217, கரக்பூர் 8972073925, 9332392339, பாலாசோர் 8249591559, 7978418322, ஷாலிமார் 9903370746 எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* பிரதமர் மோடி வேதனை
ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். ரயில்வே அமைச்சரிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன ”என்று டிவீட் செய்துள்ளார்.
* சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் புவனேஸ்வர் அருகே சரக்கு ரயில் மீது மோதியதில் 4க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. இதையடுத்து விபத்துள்ளாகி ரயிலுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 044-25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
* மம்தா வேதனை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பாலசோர் அருகே விபத்துக்குள்ளானதில் வெளியூர் செல்லும் மக்கள் சிலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
* தமிழர்களை மீட்க நடவடிக்கை ஓடிசா முதல்வருடன் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு; ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக ஹெல்லைன் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் – ஹவுரா, சரக்கு ரயிலுடன் மோதல் 233 பயணிகள் பரிதாப பலி: ஒடிசாவில் பயங்கரம்; 17 பெட்டிகள் தடம் புரண்டன; 900 பயணிகள் படுகாயம்; தமிழ்நாடு அரசு குழு விரைந்தது appeared first on Dinakaran.