×

வளமும் பொருளும் தரும் வைகாசி விசாகம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது

1. விசாக நட்சத்திரம்

27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் சிறப்புடையது. குரு பகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம். முருகப் பெருமானின் அவதார நட்சத்திரம். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும் நான்காவது பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்திருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தராசு போல இருப்பார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். இரக்க குணம் இருக்கும். மன அடக்கமும் புலனடக்கமும் இருக்கும்.

அழகிய தோற்றம், கொண்ட கொள்கைகளில் உறுதி, வேத சாஸ்திரங்களில் புலமை கொண்டு சிறந்த ஆன்மிகவாதிகளாகவும் பிரசித்தி பெற்று விளங்குவர். விசாக நட்சத்திரத்தின் பெயர் தான் வைகாசி மாதமாக மாறியது. விசாக நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் நாள் பவுர்ணமியானால் அது வைகாசி மாதம். வைகாசி மாதம் மிக விசேஷமானது. ரிஷப ராசி மாதம் என்று சொல்லுவார்கள். சூரியன் ரிஷபராசியில் பிரவேசிக்கும் காலம் வைகாசி மாதம். அந்த மாத முழு நிலவு நாளில் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் துலாம் ராசியில் இருக்கும்.

2. வசந்த ருதுவின் இரண்டாவது மாதம்

வசந்த ருதுவின் இரண்டாவது மாதம் வைகாசி. பற்பல கோயில்களில் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும். ரிஷப ராசியிலே கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் உண்டு. இந்த நட்சத்திரங்களில் சூரியன் பயணிக்கிறது. சூரியன், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் தொடங்கி, கிருத்திகை நாலாம் பாதம் (வைகாசி முதல்வாரம்) வரை அக்னி நட்சத்திரம். கார்த்திகை சூரியனுடைய நட்சத்திரம். ரோகிணி சந்திரனுடைய நட்சத்திரம்.

சந்திரன் உச்சமடையும் நட்சத்திரம் மிருகசீரிஷம் செவ்வாயினுடைய நட்சத்திரம். இப்படி வரிசையாக சூரியனுடைய நட்சத்திரமும், சந்திரனுடைய நட்சத்திரமும், செவ்வாயினுடைய நட்சத்திரமும் இணைந்து இருக்கக் கூடிய ரிஷபராசி, இது சுக்கிரனுக்குரிய ராசி என்பதால், சூரியன் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு வைகாசி மாத ராசியான ரிஷபராசிக்கு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது.

3. இந்த வருடத்திற்கான சிறப்பு

ரிஷப ராசிக்கு நேர்எதிர் ராசி விருச்சிகம். இங்கு விசாக நட்சத்திரம் இருக்கிறது. அது குருவினுடைய நட்சத்திரம். அங்கே சனியினுடைய அனுஷ நட்சத்திரம் இருக்கிறது. புதனுடைய கேட்டை நட்சத்திரம் இருக்கிறது. எனவே வைகாசி விசாகத்தில் ஏழு கிழமைகளுக்குரிய நட்சத்திர ராசி இணைப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாகத்தின் போது பஞ்சமாதிபதியான சூரியன் தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். குரு மேஷ ராசியில் இருந்து சூரியனுடைய ராசியைப் பார்க்கிறார். பூரண சுபரான குரு திரிகோண ஸ்தானங்களைப் பார்வை யிடும் அமைப்பில் அமைந்தது இந்த வருடத்திற்கான சிறப்பு.

4. சுக்கிர மங்கள யோகம்

சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து சுக்கிர மங்கள யோகத்தைத் தருகின்ற அமைப்பு உண்டு. கால புருஷனுக்கு லாப ஸ்தானத்தில் சனி ஆட்சி பலத்தோடு வீற்றிருக்கும் அமைப்பு இந்த ஆண்டில் உண்டு. இது உலக நன்மையை அதிகரிக்கும். சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும், அம்பாள் ஆலயங்களிலும், திருமால் ஆலயங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். வைகாசி பெருவிழா என்றும் விசாகத் திருவிழா என்றும் அழைக்கப்படும் இவ் விழாக்கள் அற்புதமானவை. முக்கியமாக முருகனுக்கு வைகாசி விசாகம் மிக விசேஷம். எமதர்ம ராஜனின் அவதார தினமும் விசாகம்தான். அதனால் இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

5. விசாகன்

பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விசேஷம். திருவோண நட்சத்திரம், திருமாலுக்கும், திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கும் உரியது. இந்த நட்சத்திரத்தை வைத்து பெருமாளின் பெயரை திருவோணத்தான் என்றும் சிவனின் பழைய பெயரை திரு ஆதிரையான் என்றும் சொல்லும் வழக்கம் உண்டு முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் சிறப்பானது என்பதால் கார்த்திகையான் என்கிற பெயரும், வைகாசி நட்சத்திரம் உரியது என்பதால் விசாகன் என்றும் அழைப்பது வழக்கம். வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக்கூடியவர் என்று பொருள்படும்.

6. ஸ்காந்தம்

வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஸ்காந்தம் எனும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் ஸ்லோகங்கள் தான். முருகனின் பெருமையை இந்தப் புராணம் விளக்குகிறது. பரமேசுவரன் இமவான் மகளாகிய உமையை மணக்கிறார். பிரம்மனிடம் பெரு வரம் வாங்கிய சூரபத்மனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவனிடம் முறையிடுகின்றனர். அவரும் தேவர் துயர் தீர்க்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். ஐந்து திருமுகங்களோடு அதோமுகமும் கொள்கிறார், ஆறு திருமுகங்களிலும் உள்ள ஆறு நெற்றிக்கண் களினின்றும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயுவும் அக்கினியும் ஏந்திவந்து சரவணப் பொய்கையில் சேர்த்து விடுகின்றனர். அப்பொய்கையில் பூத்த ஆறு தாமரை மலர்களில் இந்தப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறுகின்றன.

7. முருகன் திருஅவதாரக் கதை

இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றனர். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கை வருகிறார். அம்மை, குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுக்க ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறு முகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள். அவனே கந்தன் என்றும் ஆறுமுகம் என்றும் அழைக்கப்படுகிறான் என்று முருகன் திரு அவதாரக் கதையை கச்சியப்பர் கந்த புராணத்திலேயே விளக்குகிறார்.
அருவமும் உருவம் ஆகிஅனாதியாய்,
பலவாய், ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்
மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள்
பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்து உதித்தனன் உலகம் உய்யஇராமாயணத்தின் நிகழ்வுகள் போலவே கந்தபுராணத்தில் இருக்கும். ‘‘வேலும் வில்லும்” என்று பி. அக்காலத்தில் அற்புதமான புத்தகத்தை இரண்டு நூல்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

8. சோதி நாள்

விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே வைணவத்தில் ஆழ்வாரும் ஆச்சார்யருமான நம்மாழ்வாரும் பிறந்தார். ஆழ்வார் திருநகரி, திருக்கண்ணபுரம், காஞ்சிபுரம் முதலிய திருத்தலங்களில் வைகாசி பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.

9. ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு பணி

முருகப் பெருமானின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு அருள்பணி உண்டு. இந்த பணிகளை ரசத்தோடு அற்புதமாக விளக்குகிறார் அருணகிரிநாதர்.
ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழிபேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினைதீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கிநின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரைவதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணரவந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள்நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

இத்தனை சக்திகளை உடைய ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களிலும், கந்த சஷ்டியிலும் துதித்து வழிபட வினைகள் பறந்தோடும்.

10. ஆறுமுகனாக வழிபடுவதற்கான காரணம்

கந்தனை ஆறுமுகனாக வழிபடுவதற்கான காரணத்தை திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் விளக்குகிறார். உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், பக்தர்களுக்கு அருள ஒரு முகம், வேள்விகளைக் காக்க ஒரு முகம், உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம், பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் சேர்ந்திருக்க ஒரு முகம். அதனால் தான் ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தால் வேலனை வலம் வந்து துதிக்கிறோம்.

11. பிரணவ ஷடாக்ஷரம்

சரவணபவ என்பது ஷடாக்ஷர மஹா மந்திரம். இந்த மந்திரத்தில் ச என்பது லக்ஷ்மிகடாக்ஷம். ர என்பது ஸரஸ்வதி கடாக்ஷம். வ என்பது போகம் – மோக்ஷம். ண என்பது சத்ருஜயம். ப என்பது ம்ருத்யுஜயம். வ என்பது நோயற்ற வாழ்வைக் குறிக்கிறது. பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களைப் பெறலாம். இப்படி சக்தி வாய்ந்தது தான் முருகனின் ஆறுபடை வீடுகளும்.

12. ஆறு குண்டலினிகள்

இந்த ஆறு படை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்
பழனி – மணிபூரகம்
சுவாமிமலை – அனாஹதம்
திருத்தணிகை – விசுத்தி
பழமுதிர்சோலை – ஆக்ஞை.

13. ஏறுமயிலேறி விளையாடு முகம்

முருகனின் வாகனம் மயில். முருகன் மயில்மேல் ஆரோகணித்து வருவதையும் கண்டிருக்கிறோம். ஞானப்பழமான மாம்பழத்திற்காக முருகன் உலகைச் சுற்றி வருவதற்கு உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாக உருமாறி முருகனைத் தாங்கியது தேவ மயில். சூரனை இரண்டாகப் பிளந்து வந்த மயில் அசுரமயில். சின்னஞ்சிறு விளையாட்டுப் பிள்ளையாக ஏறுமயில் ஏறி விளையாடும் முருகனை மாயூரத்தை அடுத்த நனிபள்ளி என்னும் தலத்திலே செப்புச்சிலை வடிவத்திலே தரிசிக்கலாம். திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு அருகே அமைந்துள்ளது மயில் பாறை முருகன் கோயில். இக்கோயில் அடர்ந்த வனப்பகுதி நடுவில் மயில்கள் ஆடும் சோலைவனமாக அமையப் பெற்றிருக்கிறது. எனவே இது மயில் பாறை எனப் பெயர்பெற்று விளங்கி வருகிறது.

14. கழுகுமலை முருகன்

கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இங்கு கோயிலிலுள்ள முருகன் ஆறு கரங்களுடன் மயில்வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இங்கு முருகனின் இடப்பக்கத்தில் மயில் உள்ளது. ஆலயத்திலுள்ள நூறு தூண்களிலும் ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் உருவங்கள் காட்சி அளிக்கின்றன. விராலிமலை மூலவர் சண்முகர், மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கித் தரிசனம் தருகிறார்.

15. ஈசருடன் ஞானமொழி பேசுமுகம்

குருவாக ஞானபண்டிதனாக விளங்கு பவன் முருகன். அருணகிரிநாதர் குருவாய் வரவேண்டும் என்று கோருகிறார்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

குருவாய் அரனுக்கு உபதேசம் செய்த குகனைக் காண நாம் அந்த ஞானபண்டிதன் இருக்கும் திருஏரகத்திற்கே (சுவாமிமலை) விரைவோம்.

16. சுவாமிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடு

களில் நான்காவது படைவீடாகும். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும். முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன் சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாக இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமி மலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேஸ்வரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்த ரேஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. சென்னையை அடுத்த போரூரில் உள்ள உறவுகன் ஆலயத்தில், ஞானபண்டி தனைக் காணலாம். கருவறையைச் சுற்றியுள்ள மேலப்பிரகாரத்திலே இரண்டடி உயரத்திலுள்ள செப்புச்சிலை வடிவில் சிவனின் மடிமீது இருந்துகொண்டே பிரணவ உபதேசம் செய்யும் கோலத்தில் ஞான பண்டிதன் காட்சி தருவான்.

17. திருவேரகத்துச் செட்டியாரே!

திருவேரகம் என்ற பெயர் ஞாபகம் வைத்தாலே முருகனைச் செட்டியார் என காளமேகம் அழைத்து பாடிய இந்த பாடல் ஞாபகம் வந்துவிடும்.

வெங்காயம் சுக்கானால்வெந்தயத்தால்
ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம் வேரகத்துச்
செட்டியாரே!!

வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம் என சமையலறைப் பொருளை வைத்தே பாடிய நுட்பமான பாடல். காளமேகம் மடைப்பள்ளி வேலை செய்து கொண்டிருந்தவர். பாடலுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.

18. உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன?

வெங்காயம் – வெறும் காயம் – வெங்காயத்தை இறுதிவரை உரித்தாலும் எதுவும் இருக்காது. அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் ஒன்றும் தேறாது. இஞ்சி காய்ந்தால் சுக்கு.சுக்கானால் – காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்). வெந்து சாம்பல் ஆகிவிடும். வெந்தயத்தால் ஆவதென்ன – உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்? மங்காத சீரகத்தை தந்தீரேல் – சீரகம் – சீரான அகம் – அலைபாயாத மனம் – சஞ்சலமற்ற அறிவு – நிலைபேறு. நிலைபேற்றை கொடுத்தீர்களேயானால்… வேண்டேன் பெருங்காயம் – பெரும் / பெருமைக்குரிய உடல். வேரகத்து செட்டியாரே – வேரகம் – திருவேரகம் – சுவாமிமலை. செட்டியார் – (இங்கு) பலசரக்கு வாணிபம் செய்பவர். (முருகன்) லோக வியாபாரம் என்பார்கள். உன்னை வணங்கும் பிறவி கொடுத்து, பிறவா நிலை கொடு. உன்னை வணங்கும் பெருமையை விட்டுவிட்டால் இந்த உடலுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை என்பது திரண்ட பொருள்.

19. கூறும் அடியார் வினை தீர்க்கும் முகம்

திரு அண்ணாமலையிலே கம்பத்து இளைஞனார் கோயிலிலேயே வேலோடு வில்லும் ஏந்தி, வானோர் வணங்கும் வில்தானைத்தலைவனாக இலங்கும் திருக்கோலத்தையே பார்க்கலாம். வில், அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்வதுபோல் திருவையாறு திருத்தலத்தில் காட்சிதரும் முருகப்பெருமான், கையில் வஜ்ராயுதம் ஏந்திய நிலையில் சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய திருத்தலங்களில் அருள் பாலிக்கிறார். திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடையான் பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய திருத்தலங்களில் வில்லுடனும் முருகன் காட்சியளிக்கிறார்.

20. குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம்

அருணகிரிநாதர் முருகனின் போர் ஆற்றலை பின்வருமாறு பாடுகிறார். இந்த பாடலை தினசரி பாராயணம் செய்ய அச்சம் அகலும். பகை நீங்கும். பேராற்றல் பிறக்கும். வினைகள் ஒழியும்.

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.

விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலமான திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோயில் இந்த முகத்தை தரிசனம் செய்யலாம். திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்று இந்த தளம். மூலவர் அர்த்த நாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலை யானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாகத் தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது. செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார்.

21. மாறுபடு சூரரை வதைத்த முகம்

இம்முகத்தை திருச்செந்தூரில் காணலாம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருச்செந்தூர் கோயிலில், விபூதிப் பிரசாதம் பிரசித்தம். திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். சூரபத்மன் என்ற அரக்கனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் ‘ஜெயந்திநாதர்’.

அதுவே பின்னாளில் மருவி ‘செந்தில்நாதர்’ என்று மருவியது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன் கை வேலினால் முருகன் நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

22. திருச்செந்தூர் திருக்கோயில் சிறப்பு

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள். திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கொடிமரத்திலிருந்து வலமாக எல்லாச் சந்நதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம்.

இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை. பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப்படுகின்றது.

23. வள்ளியை மணம்புணர வந்த முகம்

தெய்வானைத் திருமணத்தை விட வள்ளித் திருமணம் விசேஷம். தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள முருகனே தேடி வந்தான். நாடகங்களிலும் வள்ளித்திருமணம் சிறப்பு. அருணகிரிநாதரும் வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று என்று இந்த திருமணத்தையே முதன்மைப்படுத்திப் பேசுகிறார். முருகனுக்கு வள்ளிக்கணவன் என்ற பெயர் உண்டு.

வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே ஊனும்
உருகுதடி கிளியே
என்ற பாடல் பிரசித்தமல்லவா …

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமாரகோயில். முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு வேள்வி மலை என்று பெயர். இதுவே பின்னர் வேளி மலையாக மருவியது. வள்ளியை முருகப் பெருமான் காதலித்த காலகட்டம். அப்போது வள்ளியின் உறவினர்கள் வள்ளியைத் தேடி அங்கே வர… வள்ளியுடன் இருந்த முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறினார் என்கிறது புராணம். எனவே இங்கு வேங்கை மரத்துக்கு சிறப்பு உண்டு.

24. வேளிமலை வைகாசி விசாகத் திருவிழா

வருடம்தோறும் இங்கு வைகாசி விசாகத் திருவிழாவின் 6-ஆம் நாளன்று மஞ்சள் தடவிய தாளில் எழுதப்பெற்ற வள்ளிக்குச் சொந்தமான உடைமைகளின் விவரம் தேவஸ்வம்போர்டு ஊழியர் ஒருவரால் இங்கு வாசிக்கப்படுகிறது. இங்கு பல வகை காவடிகள், துலா பாரம், பிடிப்பணம் (கையளவு காசு) வாரியிடுதல், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், சோறு ஊட்டுதல், காது குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், உப்பு- மிளகு காணிக்கை செலுத்துதல், அரிசி- பயறு வகைகள், காய்கறிகள்- பழங்கள் காணிக்கை செலுத்துதல், அங்கப் பிரதட்சணம், மயில்களுக்கு பொரிகடலை- தானியங்கள் வழங்குவது போன்ற நேர்ச்சை வழிபாடுகளும் நடக்கின்றன.

கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குகையை ‘வள்ளிக் குகை’ என்பர். முருகப் பெருமான்- வள்ளி திருமணம் இந்த பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது. முருகன்- வள்ளி திருமண சம்பவத்துடன் தொடர்பு கொண்ட தினைப்புனம், வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை ஆகிய இடங்கள் உள்ளன. வள்ளிதேவி நீராடிய சுனை அருகே பாறையில்- விநாயகர், வேலவர், வள்ளிதேவி ஆகியோரது புடைப்புச் சிற்பங்களைக் காணலாம்.

25. வள்ளியுடன் முருகன் காட்சி தரும் தலங்கள்

பழநியில் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாள்களிலும் மலைக்கோயிலில் வள்ளித் திருமணம் நடைபெறும். அதேபோல், பெரியநாயகி அம்மன் கோயிலிலும் மூன்று முறை நிகழ்த்து கிறார்கள். பழநிமலைக் கோயிலிலும், பள்ளியறையில் வள்ளி மட்டுமே முருகனுடன் எழுந்தருள்கிறாள். திருச்செந்தூரில் பங்குனி உத்திர விழாவில் வள்ளித் திருமணம் நடத்துவர். இங்கே, வள்ளியே பள்ளியறை நாச்சியாராக முருகனுடன் பள்ளியறைச் சேவை காண்கிறாள். சுவாமி மலையில் வேட ரூப வடிவில் முருகனும், கையில் கவண் ஏந்திய வள்ளியும் உற்சவ மூர்த்திகளாக உள்ளனர். கோவைக்கு அருகில் குருந்த மலையில், வள்ளிமலை என்ற சிறு குன்றில் வள்ளிக் குகையும், வள்ளி வடிவமும் உள்ளன. சென்னைக்கு அருகே சிறுவாபுரியில் வள்ளியும் முருகனும் மணவாளக் கோலத்தில், ‘வள்ளி கல்யாண சுந்தரராக’ கரம் பற்றிய நிலையில், பஞ்சலோக வடிவில் அருள்கிறார்கள்.

26. வைகாசி விசாகம் சிறப்புகள்

முருகனுக்குரிய விசாகத்தின் சிறப்பினை சொல்லி மாளாது. வைகாசி விசாக தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும்படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன்பொம்மைகளை அதில் இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவப்பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

27. விசாகத்துக்கு இணை விசாகம்தான்

இது குருவின் நட்சத்திரம் என்பதால் பல குருமார்கள் இந்த விசாகத்தில் அவதாரம் செய்திருக்கிறார்கள். வள்ளல் ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம் இது. நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோதனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாகக் கருதப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றும் நாடகக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும், வைகாசி விசாக தினத்தில் ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

28. விசாகனான முருகனுக்கு எத்தனைத் தலங்கள்?

ஞானம், வைராக்கியம், செல்வம், கீர்த்தி, பலம், ஐஸ்வர்யம் போன்ற ஆறு பண்புகளை கொண்டது முருகனின் திருமுகங்கள். அவரை வணங்குவதால் இந்த குணங்கள் நமக்குக் கிடைக்கும். முருகனின் அருளை வேண்டுவோர் இந்நாளில் பால்குடம், காவடி எடுத்து வழிபடுவார்கள். இனி சில முக்கியமான முருகன் தலங்களை தரிசிப்போம். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 44 கி.மீ. யில் செட்டிகுளம் என்ற தலத்தில் உள்ளது, தண்டாயுதபாணி ஆலயம். குழந்தைப்பேறு வேண்டி இந்த முருகனைப் பிரார்த்திக்கும் தம்பதியர் வேண்டுதல் நிறைவேறியதும் அக்குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து, பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மேலகல்கந்தார் கோட்டையில் உள்ளது பாலமுருகன் ஆலயம். கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் இருக்க, அவருக்கு முன் அன்னை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் உள்ளாள். சென்னிமலையில் இரண்டு முகங்கள், எட்டுக் கரங்கள் கொண்டு யாக அக்னியை வளர்க்கும் அக்னி ஜாதகர் என்னும் அரிய திருவுருவத்தில் இருக்கின்றார்.

29. நாகதோஷ நிவர்த்தி

சீர்காழிக்கு மேற்கே 4 கி.மீ. யில் கொண்டல் என்ற கிராமத்தில் அருள்பாலிக்கிறார் குமார சுப்ரமணிய சுவாமி. தங்கள் மகளுக்கு மணமாக வேண்டும் என்று எண்ணும் பெற்றோரும் விரும்பிய கணவன் அமைய பெண்களும் இந்த ஆலயம் வந்து முருகனிடம் வேண்டிக்கொள்கின்றனர். லால்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் சுப்ரமணியசுவாமி கோயில். வைகாசி விசாகம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோவை காந்திபுரத்திலிருந்து 8 கி.மீ. யில் உள்ளது பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்.

கிரகப் பெயர்ச்சி நாட்களில் இந்த ஆலயத்தில் பலவகை மூலிகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற விசேஷயாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்வதால், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறைவது கண்கூடு. திருப்பூர்-நம்பியூர் பாதையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள உதயகிரியில் முத்து வேலாயுத சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாறை ஒன்றில் ஐந்து தலை நாகமொன்று புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகதோஷ நிவர்த்தி செய்துகொள்கின்றனர். இவ்வாலயத்திலுள்ள கால பைரவருக்கு தனிச் சந்நதி அமைந்துள்ளது.

30. முடிவுரை

பொதுவாகவே வைகாசி மாதம் பல சிறப்புக்கள் உடையது. வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதமும் வைகாசி. ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி. வைகாசி மாதத்தில் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம், ‘‘ரிஷப விரதம்’’ ஆகும்.

இத்தனைக்கும் முதன்மையானது வைகாசி விசாகம். முருகனின் பெருமைகளை உணர்ந்து, வைகாசி விசாகத்தில் முருகனின் திருப்பாதத்தில் சரணடைய சகலமும் கிடைக்கும். அன்றைய நாளில் முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், நீர்மோர், பானகம் போன்றவையும் முருகனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இதன் மூலம் முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

தொகுப்பு: எஸ்.கோகுலாச்சாரி

The post வளமும் பொருளும் தரும் வைகாசி விசாகம் appeared first on Dinakaran.

Tags : Vaikasi ,Saffron ,Vaikasi Visagam ,
× RELATED எப்போதும் கேட்கும் ஒலிகள்!