கொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொல்லிமலைக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கடந்த 2 நாட்கள் விடுமுறை தினம் என்பதால், கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை மலையின் இயற்கை சூழல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

காலை 10 மணியிலிருந்து 50வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 70வது கொண்டை ஊசி வளைவு வரை மேகமூட்டங்கள் சாலையை கடந்து செல்லும் காட்சி, சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வளைவுக்கு மேல் சாலையோர மரங்களை மேகக்கூட்டம் தொட்டு சென்றது. அவ்வப்போது பெய்த சாரல் மழை பெய்தது. மேலும் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவிகளிலும் தண்ணீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக மிதமான வெப்பம் நிலவி வந்தது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி ஜில்லென்று குளிர்காற்று வீசுகிறது.

× RELATED நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்