×

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பழவூரில் கண்களை கட்டிக் கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

பணகுடி, பிப். 27: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பழவூரில் கண்களைக் கட்டிக்கொண்டு 1 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி மாணவ - மாணவிகள் சாதனை படைத்தனர். நகரமயமாதல் காரணமாகவும், மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததாலும் நமது பாரம்பரியத்துக்கும், மக்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போய் விட்டது. இதனால் பராம்பரிய கலை அழிவின் விளிம்புக்கு சென்று விட்டது. எனவே பாரம்பரிய கலையை மீட்டெடுக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழரின் தற்காப்பு கலையும், பாரம்பரிய விளையாட்டுமான சிலம்பம் கற்க ஊக்குவிக்கும் விதமாகவும், சிலம்பம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த மாணவ- மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இந்த சாதனையை மேற்கொண்டனர். இதனை பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடனும், வியப்புடனும் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில், ‘செல்போன், டிவி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவும், தமிழரின் பாரம்பரிய கலையை வளர்ப்பதற்கும் குழந்தைகளுக்கு இடையே ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும் இத்தகைய சாதனைகள் உதவும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையானது, சாமானிய ஏழைகளுக்கு விரோதமானதுதான் என மிகச்சிறந்த கல்வியாளர்கள் எல்லாம் அரசின் கவனத்திற்கு சொல்லி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் பட்டப்படிப்பில் 52 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் சராசரி 34 சதவீதம்தான். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி நடைமுறைப்படுத்தினால் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும்’ என்றார். மாவட்ட கவுன்சிலர் ஆவரைகுளம் பாஸ்கர், நெல்லை மாவட்ட டாக்டர் கலைஞர் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க செயலாளர்  இசக்கியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டித்துரை, கொஜிஜன், முருகன் சுடலைமணி, முத்துமணி, பயிற்சியாளர்கள் முருகன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Palavoor ,Tamils ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு