திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளிகோயில்களில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இது, இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள கோயிலாகும். தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மடப்புரம் கோயில் வழியாக ஏனாதி, தேளி, கணக்கன்குடி, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த கோயில் வாசலை ஆக்கிரமித்து பலரும் தேங்காய்,, பழம், சூடம், எலுமிச்சம்பழம், கூல்டிரிங்ஸ் கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து இருக்கும் கடைகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கடந்த ஒரு வருடமாக கோயில் நிர்வாகம் ஆக்ரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்து வருகிறது. இதற்கிடையே கோயிலின் ஒரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் மறுபுறம் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் சிறுவர், சிறுமியர்களை கடைகளில் அமர வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்ற வந்த போலீசார் மற்றும் கோயில் ஊழியர்களை கண்டித்து அவர்கள் கோஷமிட்டதுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிமாக ஒத்திவைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள், வாகன நிறுத்துமிடம், விடுதி வசதி உள்ளிட்டவை செய்யப்பட உள்ளது.
