காரைக்குடி: காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செக்காலை வீதிகள், வாட்டர் டேங்க், சுப்பிரமணியபுரம் பகுதி மற்றும் சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பர்மாகாலனி பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள மரங்களில் அதிக எண்ணிக்கையில் குரங்குகள் முகாமிட்டுள்ளன. இவை அதிரடியாக வீடுகளுக்குள் நுழைந்து உணவு பொருட்களை சூறையாடுவதோடு, விரட்ட வருபவர்களை கடிக்க வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் இரவு நேரங்களில் பயத்துடனே வீட்டிற்குள் இருக்க வேண்டியநிலை உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து செக்காலை பகுதியை சேர்ந்த மணி என்பவர் கூறுகையில், குரங்குகள் தொல்லையால் வீட்டிற்குள் இருக்கவே பயமாக உள்ளது. 10க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டின் மொட்டை மாடியில் முகாமிடுகின்றன. இதனால் துணி உலர்த்துவது உள்ளிட்ட காரணங்களுக்கு மாடிக்கு செல்லவே பயமாக உள்ளது. தவிர தண்ணீர் பைப்புகளை திறந்துவிடுவது, வீட்டிற்குள் எங்காவது ஒளிந்து கொள்வது என அட்டகாசம் செய்கின்றன.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், குரங்குகளுக்கு ரேபிஸ் நோய் இருக்கும் பட்சத்தில் அது நம்மை கடித்தால் அந்நோய் நம்மை பாதிக்கும் அபாயம் உள்ளது. தவிர அவைகளுக்கு மனிதர்களை போல் டெங்கு உள்பட பல்வேறு வைரஸ் மூலம் பரவக்கூடிய காய்ச்சலும் வரும். அந்நோய்கள் குரங்குகள் மூலம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குரங்குகள் குளித்த டேங்க் நீரை நாம் பயன்படுத்துவதால் தண்ணீர் மூலம் பரவக்கூடிய வயிற்றுபோக்கு, வாந்தி வர வாய்ப்புள்ளது. குரங்கு கூட்டத்தில் ஆல்பாமேல் என்ற ஆண் குரங்கு இருக்கும். அதுதான் அனைத்தையும் வழிகாட்டி அழைத்து செல்லும். தவிர தங்களுக்கு பாதுகாப்பான இடத்தையும் அதுவே தேர்வு செய்யும். இதன்படி இந்த குரங்கை கண்காணித்து வனத்துறையினர் பிடித்தால் மற்றவை தானாக சென்றுவிடும். இவைகளுக்கு உணவாகக்கூடிய அத்தி, அரசு, ஆலம் போன்ற மரங்களை ஊருக்கு வெளியே நட வேண்டும். அப்போது இவை உணவு தேவைக்காக ஊருக்குள் வராது என்றார்.
