×

நெல்லை அறிவியல் மையத்தில் உலக வனநாள் விழா மண் வளம் மிக்க காடுகளை காப்பது அனைவரின் கடமை கலெக்டர் கார்த்திகேயன் பேச்சு

நெல்லை, மார்ச் 22: மண் வளம் மிக்க காடுகளை காப்பது அனைவரின் கடமையாகும் என நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடந்த உலக வனநாள் விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். பாளை கொக்கிரகுளத்தில் செயல்படும் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நெல்லை மாவட்ட வனத்துறை சார்பில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட வன அலுவலரும், வன உயிரினக்காப்பாளருமான முருகன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், இதையொட்டி வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘நெல்லை மாவட்டம் மிகவும் தொன்மைவாய்ந்து.

இதற்கான ஆதாரங்களை பொருநை தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. 5 வகை நிலங்களை கொண்ட மாவட்டமாக நெல்லை திகழ்கிறது. காடுகளுக்கும், தமிழ சமூகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது என்பதை சங்க இலக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மண் வளம் மிக்க காடுகளை காப்பது அனைவரின் கடமையாகும்’’ என்றார். முன்னதாக  உதவி வனப் பாதுகாவலர் ஷா நவாஸ்கான் முன்னிலை வகித்துப் பேசினார். நெல்லை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எம்எம் குமார், உலக வெப்பமயமாதல் அதன் விளைவுகள் குறித்து விளக்கிப் பேசினார். விழா நிகழ்ச்சிகளை சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாக்கியநாதன் தொகுத்து வழங்கினார். மாணவ மாணவிகள் வனப்பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். வனச்சரக அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

Tags : Karthikeyan ,World Forest Day ,Nellie Science Center ,
× RELATED திருவண்ணாமலையில் போக்குவரத்து...