×

மங்கலம், இடுவாய், ஆண்டிபாளையத்தை இணைத்து வீரபாண்டி பகுதியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

திருப்பூர்:   மங்கலம், இடுவாய், ஆண்டிபாளையத்தை இணைத்து வீரபாண்டி பகுதியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும் என திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.   திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மங்கலம் கிராம நீரை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுச்சாமி பேசுகையில், ‘‘திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள திருப்பூர் டவுன் ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம் போன்ற கிராமங்கள் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் உள்ள பதிவு அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பத்திரம் பதிவு செய்ய நெருப்பெரிச்சல் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போதிய பஸ் வசதி இல்லாத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள்.

எனவே தெற்கு வட்டம் வீரபாண்டி கிராமத்தை உள்ளடக்கி, மங்கலம், இடுவாய், ஆண்டிபாளையம் கிராமங்களை சேர்த்து மேற்கண்ட கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள வீரபாண்டி பகுதியில் புதியதாக ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தை அமைத்து தர வேண்டும். இடுவாய் பஞ்சாயத்தில் சின்ன காளிபாளையம் ஆட்டையம்பாளையம், சிரங்கவுண்டம்பாளையம் போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் பலர் உள்ளனர். இந்நிலையில் கால்நடை மருத்துவமனையில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. எனவே தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும்’’ என்றார். சாமளாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் கூறுகையில், பூமலூர் கிராமத்தில் 1982 ம் ஆண்டு கிளை வாய்க்கால் வெட்டப்பட்டு பல்லடம் விரிவாக்க கால்வாய் மடை, அரசுக்கு சொந்தமான கிளை வாய்க்கால் மூலம் 158 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான கிளை வாய்க்காலை முற்றாக அழிப்பதற்கு ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தும், கிளை வாய்க்காலை மறைக்கும் வகையில் இருந்து வரும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அழிக்கப்பட்ட கிளை வாய்க்காலை தண்ணீர் தேங்காமல் செல்லும்படி கான்கிரீட் வாயிலாக அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.

இடுவம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், ‘‘இடுவாய் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான பூமியில் 36 ஆண்டுக்கு முன்பு பிஏபி பாசன திட்டத்திற்காக நிலத்தை எடுத்து பாசன வாய்க்கால் தோண்டி பயன்படுத்தினர்.  நாங்கள் இதற்கு பலமுறை நஷ்ட ஈடு கேட்டும், கையகப்படுத்திய நிலத்திற்கு நஷ்ட ஈடு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதுபோல கடந்த 10 ஆண்டுகளாக பிஏபி வாய்க்காலில் தண்ணீரும் வருவதில்லை. இதனால் நஷ்ட ஈடு வழங்கவில்லை என்றால், எங்கள் நிலத்தை திருப்பி தர வேண்டும் என கோரியுள்ளனர்.

Tags : Veerapandi ,Mangalam ,Ituvai ,Antipalayam ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி